Advertisment

“வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர்” - த.வெ.க. தலைவர் விஜய் பதிலடி!

tvk-vijay-mic

வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாநாட்டில் அறிவித்ததைப் போலவே, "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் நேற்று (13.09.2025) தொடங்கினோம். எளிதாகக் கடந்துவிடும் தூரத்தைக்கூட மக்கள் கடலில் பல மணிநேரம் நீந்தியே கடக்க வேண்டிய சூழல் இருந்தது என்பதை நாடும் நன்றாகவே உணர்ந்தது. இதையே நமது கொள்கை மற்றும் அரசியல் எதிரிகளும் இன்னும் ஆழமாக உணர்ந்திருப்பர்.

Advertisment

'விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்' என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர். இதை முன்கூட்டியே ஒப்புக்கொள்வது போலத்தான் தங்களது கதறலை முப்பெரும் விழா என்கிற கடிதம் ஒன்றின் வாயிலாக வெளிப்படுத்தியிருந்தனர். புதிய எதிரிகள் என்று பெயர் சொல்லாமல் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. பழையன கழிதலும் புதியன புகுதலும்தானே பழந்தமிழ் மரபு?. இன்னும் என்னென்னவோ வெறுப்பையும் விரக்தியையும் கக்கும் வார்த்தைகள் அக்கடிதத்தில் அழுதுகொண்டிருந்தன. வெளியே கொள்கை, கொள்கை என்று பேசுவதும் உள்ளுக்குள்ளே பாஜகவோடு உறவாடுவதும் யார் என்று மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். எனவே, கொள்கைக் கூப்பாடு போட்டு ஏமாற்றிக்கொண்டே கொள்ளை அடிப்போர் யார் என்று தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன? 

பொய் வாக்குறுதிகளை அள்ளி அள்ளித் தெளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிட்டு, கேள்வி கேட்டுத் தங்களது உரிமைகளுக்காகப் போராட வரும் அதே சாமானிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுபவர் யார் என்றும் தமிழக மக்களுக்குத் தெரியாதா என்ன?. தமிழகம் தாண்டியும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உருவாகி இருக்கும் தன்னெழுச்சியான புத்தெழுச்சி, இப்போது அவர்களை ஏகத்துக்கும் குமுற வைத்துள்ளது. பொதுமக்களுக்கு இவர்கள் செய்யும் இடையூறுகள் அனைத்தையும் பற்றி, மக்களே கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர்.

மாபெரும் மக்கள் சக்தியுடன் வந்த எம்.ஜி.ஆரையும் 'அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்' என்றும் 'வெறும் கவர்ச்சியை மாத்திரம் வைத்துக்கொண்டிருப்பவர்' என்றும் தங்கள் மனத்தில் மண்டிக் கிடந்த வெறுப்பு நெருப்பைக் கக்கியவர்கள்தானே இவர்கள்?. அன்றே இவர்கள் இப்படித்தான். இன்று மட்டும் மாறிவிடுவார்களா?. மாபெரும் மக்கள் சக்தி, பெண்கள் சக்தி மற்றும் இளைஞர் சக்தியுடன் மக்களரசியலில் முதன்மைச் சக்தியாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் எப்படிக் குறைகூறாமல் இருப்பார்கள்?. யார் எத்தனைக் கூப்பாடு போட்டாலும், எப்படிக் கதறினாலும், எத்தகைய வெறுப்பைக் கக்கினாலும் நாம் முன்னேறிச் செல்வோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயரிய அடிப்படைக் கோட்பாட்டோடு, மதச்சார்பற்ற சமூக நீதி என்ற மகத்தான கொள்கையோடு பாதை வகுப்போம். 

Advertisment

தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கை வழிகாட்டுதலுடன் வெற்றிநடை போடுவோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் 1967, 1977 தேர்தல்களில் நிகழ்ந்ததைப் போல மாபெரும் வெற்றி விளைவை மக்கள் சக்தியின் பேராதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் நிகழ்த்திக் காட்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Assembly Election 2026 trichy tvk vijay tvk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe