Advertisment

“முதன்மை சக்தி என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” - த.வெ.க. தலைவர் விஜய்!

tvk-vijay-1

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைக்கான மை டி.வி.கே, (MY TVK) செயலியை அக்கட்சி தலைவர் விஜய் கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி (30.07.2025) வெளியிட்டார். இதற்கிடையே அக்கட்சியின் 2வது மாநாடு மதுரையில், தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள பாரப்பட்டி என்னும் இடத்தில் நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையொட்டி அதற்கான பூமி பூஜை ஜூலை 16ஆம் தேதி அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. 

இத்தகைய சூழலில் தான் ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளதால் 25ஆம் தேதி மாநாட்டிற்கு பாதுகாப்பு தருவதில் சிக்கல் ஏற்படும் என்பதால் மாநாட்டை 25ஆம் தேதிக்கு முன்னர் நடத்திக் கொள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு காவல்துறை அறிவுறுத்தி இருந்தது. அதில், ஆகஸ்ட் 18 முதல் 22ஆம் தேதிக்குள் மாநாட்டை நடத்திக் கொள்ள போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதன்படி த.வெ.க.வின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் அக்கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம். இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட, அதாவது உங்க ஆதரவால கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம். 

வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம். இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில, நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு, ஜனநாயகப் போர்ல அவங்கள வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு. 

அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி. மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் (2024) அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Conference letter madurai Tamilaga Vettri Kazhagam tvk vijay
இதையும் படியுங்கள்
Subscribe