புதுச்சேரியில் உள்ள உப்பள மைதானத்தில் இன்று (09.12.2025) காலை 11.00 மணியளவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி பிரச்சார வாகன பேருந்தில் நின்றபடியே காலை 11.25 மணி அளவில் விஜய் பேசினார். இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, விரைவு (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் க்யூ.ஆர். கோடு இல்லாமல் த.வெ.க தொண்டர்கள் சிலர் பொதுக் கூட்டம் நடைபெறும் கேட் மீது ஏறி உள்ளே நுழைந்தனர். இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசுகையில், “என் நெஞ்சில் குடியிருக்கும் புதுச்சேரி மக்கள் அனைவருக்கு என்னுடைய வணக்கம். ஒன்றிய அரசுக்குத் தான் தமிழ்நாடு ஒரு தனி மாநிலம். புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என இருக்கின்றனர். ஆனால் த.வெ.க.விற்கு அப்படி இல்லை. நாம் எல்லோரும் வேறு வேறு கிடையாது. எல்லோரும் ஒன்று தான். நாம் எல்லாம் சொந்தம் தான். வேறு இடத்தில் இருப்பதால் சொந்தம் இல்லை என்று ஆகிவிடுமா?. அது எப்படி முடியும்.
ஒருத்தர் ஒருத்தரைப் பார்த்துக்கொள்ளும் போது பாச உணர்வு உள்ளது. அது மட்டும் இருந்துவிடால் போதும் வேறு எதுவும் தேவையில்லை. அதனால் தமிழ்நாடு, புதுச்சேரி கேரளா, கர்நாடகா, ஆந்திரா மட்டுமல்ல. உலகத்தில் எந்த மூலையில் நம் வகையாரா இருந்தாலும், அவர்கள் எல்லோரும் நம் உயிர்தான். அவர்கள் எல்லோரும் நம் உறவு தான்” எனப் பேசினார்.
Follow Us