ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 68வது நினைவு தினம் இன்று (11.09.2025) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் கட்சித் தலைவர்கள் அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதே சமயம் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக நினைவிடத்திற்கு அருகே உள்ள தண்டவாளப் பகுதியில் போலீசார் கண்காணிப்பு தீவிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருக்கின்றனர். ஏற்கனவே அங்கு வரும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வரக்கூடாது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் விஜய், இம்மானுவேல் சேகரனார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், “சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி, எளிய மக்களுக்காகக் களமாடியவர், விடுதலைப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரன். அவரது உரிமைப் போராட்டங்களும், தியாகமும் போற்றுதலுக்கு உரியவை. தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாளையொட்டி, சென்னையில் எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.