கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் அமைத்து உத்தரவிட்டார். இதனிடையே, ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் இந்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் எனவும், தவெகவுக்கு எதிராக சென்னை நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும் எனவும் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே சமயம், சமயம் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்குகள் நேற்று (13-10-25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய் பட்டினம்பாக்கம் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்திப்பது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜா ஆகியோருடன் விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றார்.
முன்னதாக வரும் 17 ஆம் தேதி விஜய் கரூருக்குச் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து 20 லட்சம் ரூபாய் மற்றும் 2 லட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையை விஜய் வழங்க இருப்பதாகக் கூறப்பட்டது. மேலும், இந்த நிகழ்வில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்வார் என்றும் பொதுமக்களுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.