தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூர் மாவட்டம் அகரஞ்சேரியில் இன்று (23.02..2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் விஜய், அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து உறுதிமொழி எடுத்தார். அதில், “எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்குத் தான். யாரையும் நம்பி ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்; இது நிஜம்” எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “எனக்கு புது நண்பர் ஒருத்தர் கிடைத்திருக்கிறார். யார் தெரியுமா?. முதல்வர் தான். ஒரு நிருபர் ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு எதிரிகள் எல்லாம் யாரும் இல்லை அவர்கள் எல்லாருமே எனக்கு நண்பர்கள் தான் என்று சொன்னார். அப்படி நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள்தான் என்றால் அப்புறம் ஏன் சார் கரூர் விஷயத்தில் என் மேல் பழியைத் தூக்கிப் போட்டீர்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படி பேச்சிருப்பீர்களா?.
அப்படி நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால் ஒரு விழா நடத்துவதற்கு ஒரு இடமோ ஒரு அனுமதியோ ஏன்கொடுக்க மறுக்கிறீர்கள். எல்லாத்தையும் நீங்களே செய்துவிட்டு போற போக்கில் அப்படியே பொய்களாக அடித்து விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உங்களுடைய உண்மையான நண்பர்கள் யார் என்று சொல்லட்டுமா லஞ்சம் ஊழல் அரசியல் ஆதாயம் இதெல்லாம் தான் உங்களுடைய உண்மையான நண்பர்கள்.
உங்கள் ஆட்சிதான் தப்பான ஆட்சி. தமிழ்நாட்டுக்குத் தேவையில்லாத ஆட்சி. கொஞ்ச நாளைக்கு முன்னாள் கற்பனையாக ஒரு விஷயம் ஒன்று சொன்னேன் இந்த முதல்வர் கூட விசில் சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார் என்று அப்படி கற்பனையாகச் சொன்னேன். ஆனால் இன்றைக்கு நிஜமாகவே நமக்கு ஆதரவாக ஒரு கோஷத்தை அது என்ன தெரியுமா? எங்க வாக்குச் சாவடி வெற்றி வாக்குச் சாவடியாம். அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?. எங்க வாக்குச் சாவடி விஜய் வாக்குச் சாவடி என்று அர்த்தம்” எனப் பேசினார்.
Follow Us