TVK leader Vijay gets permission with conditions for public meeting in puducherry
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு நெறிமுறைகளை வகுப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால், கடந்த 5ஆம் தேதி புதுச்சேரியில் தவெக சார்பில் விஜய் தலைமையில் ரோடு ஷோ நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதற்கு அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் த.வெ.க., நிர்வாகிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி மனு கொடுத்தனர். ஆனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோக்கு அனுமதி மறுக்கப்பட்டது. புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம் நடத்தலாம், ஆனால் ரோடு ஷோக்கு அனுமதி கிடையாது என புதுச்சேரி காவல்துறை தெரிவித்திருந்தது.
இத்தகைய சூழலில், புதுச்சேரியில் வரும் 9ஆம் தேதி விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என தவெகவினர் புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணியிடம் கடிதம் அளித்தனர். இதற்கான அனுமதியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று (05-12-25) அளித்தார். புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பொதுக்கூட்ட அனுமதி கடிதத்தைப் பெற்றுச் சென்றார்.
இந்த நிலையில், புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை நிபந்தனை விதித்துள்ளது. அதில் கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்குகொள்ள வேண்டும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் கூட்டத்திற்கு வரக்கூடாது, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டத்துக்கு வரக்கூடியவர்களுக்கு கியூஆர் ஸ்கேன் முறை நடைமுறைப்படுத்த வேண்டும், வரக்கூடிய பொதுமக்களுக்கு தவெக தொண்டர்கள் குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சரியாக செய்து தரப்பட வேண்டும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை புதுச்சேரி காவல்துறை விதித்துள்ளது.
Follow Us