TVK leader Vijay formed a committee to prepare the election manifesto
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு கட்சிகளும், தங்களது கட்சிக்குள் குழு ஒன்றை அமைத்து தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றன.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள்ம், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.
அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது. இந்த குழுவில், அருண்ராக். பிரபாகர், ராஜ்மோகன், மயூரி, அருள் பிரகாசம், விஜய் ஆர்.பரணிபாலாஜி, முகமது பர்வேஸ், பிரபு, கிறிஸ்டி பிருத்வி, தேன்மொழி பிரசன்னா, சத்யகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினருக்குக் கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு நல்குவதோடு, அந்தந்தப் பகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளைச் சந்திக்கும் பொழுது தேவையான உதவிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us