நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் விழா அவரது ரசிகர்களாலும், கட்சித் தொண்டர்களாலும் இன்று (25.08.2025)  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி, தேமுதிக பொதுச் செயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, சென்னை விருகம்பாகத்தில் உள்ள தனது இல்லத்தில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது அவர், “விஜயகாந்த், ரியல் எம்.ஜி.ஆராக வாழ்ந்தவர். அதனால் தான் அவரை மக்கள் கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைத்தார்கள். திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி என எல்லா இடத்திலும் எம்.ஜி.ஆரை தனது மானசீக குருவாக விஜயகாந்த் முன்னிலைப்படுத்தினார்” என்று கூறினார். இதையடுத்து எம்.ஜி.ஆர், விஜயகாந்த் ஆகிய இரண்டு பேரும் சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்தவர்கள், இன்னும் வரக்கூடிய ஆட்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு அட்வைஸ் எல்லாம் கூற முடியாது, ஏதோ ஒரு முடிவை எடுத்து தான் வருகிறார்கள். எங்களைப் பொறுத்தவரைக்கும் எங்களது விஜயகாந்த் எங்களுக்கு என்ன சொல்லிருக்கிறாரோ அதை நாங்கள் செயல்படுத்துவோம். 

உறுதியாக அவருடைய பொன்னான திட்டங்களை மக்களுக்கு சென்றயடைய செய்வோம். விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் போனபோது கட்சி தொய்வடைந்தது உண்மை தான். ஆனால், இன்றைக்கு அவர் மறைந்து கட்சியை தலை நிமிர வைத்துவிட்டார்” என்று கூறினார். இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் விஜயகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கா நினைவில் வாழும் அண்ணன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு வணக்கத்துடன் பிறந்தநாள் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.