Advertisment

“யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்?” - திருத்தணி சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!

thiruvijay

TVK leader Vijay condemns the Thirutani incident

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகில் 27 ஆம் தேதி வடமாநில இளைஞர் சூரஜ் (34) என்பவர் சென்னையில் இருந்து மின்சார ரயிலில் திருத்தணி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாலங்காடு ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் 17 வயதுடைய 4 சிறுவர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். மேலும், ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் கெத்து காட்ட கத்தியுடன் ஆடியபடி அவர்கள் அதனைத் தங்களது செல்போனிலும் பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு சிறுவன் ரயிலில் பயணம் செய்த சூரஜை வெட்டுவதுபோல கத்தியைக் காட்டி மிரட்ட, மற்றொரு சிறுவன் அனைத்தையும் ரீல்ஸ் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறார்.

Advertisment

பின்னர் திருத்தணி ரயில் நிலையம் வந்த பிறகு சூரஜ் அங்கிருந்து நடந்து சென்றிருக்கிறார். ஆனால் அப்படியும் விடாத அந்த நான்கு சிறுவர்களும் சூரஜைப் பின்தொடர்ந்து வந்து தனியே இழுத்துச் சென்று, அங்கு வைத்து மூவர்கள் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். அதனை மற்றொரு சிறுவன் ரீல்ஸ் வீடியோவாக எடுத்துள்ளார். சூரஜ் தன்னை விட்டுவிடும்படி எவ்வளவோ கெஞ்சியும், இரக்கமின்றி சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், திருவாலங்காடு அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த நந்தகோபால், திருத்தணி அருகே நெமிலியைச் சேர்ந்த சந்தோஷ், அரக்கோணத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் நந்தகோபால், விக்னேஷ், சந்தோஷ் ஆகிய மூவரையும் ஜனவரி 9 ஆம் தேதி வரை சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Thiruttani tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe