சென்னை பாரிமுனை பகுதியில் தவெகவினர் ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று தேர்தலுக்காக சர்வே எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது, திமுகவினர் அங்கு சென்று முறையாக காவல்துறையிடம் அனுமதி வாங்கி இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் திமுகவினர், தவெகவினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த தாக்குதலில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் உள்பட 5க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் படுகாயம் அடைந்து அவர்கள் அவர்கள் அவசர சிகிச்சைக்காக ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர், தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வருபவர்களிடம் ஆறுதல் கூறினர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் அமைச்சர் சேகர்பாபு இருப்பதாகவும், 100க்கும் மேற்பட்ட ரவுடிகளை வைத்து இந்த தாக்குதலை அவர் நடத்தியுள்ளதாகவும் சிடிஆர் நிர்மல்குமாரும், ஆதவ் அர்ஜுனாவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சென்னை, பாரிமுனைப் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது, ஆளும் கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் அராஜகத் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்தத் தாக்குதலில், நான்கு மாதக் கர்ப்பிணி உள்பட நிர்வாகிகள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர், அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயம் அடைந்த கழகத் தோழர்கள் ஆறு பேரும் விரைவில் குணமடைய விழைகிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே பெருகி வரும் செல்வாக்கைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆளும் கட்சியினர், மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றுள்ள நம் கழகத் தோழர்கள் மீது இவ்வாறான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயலாகும். திமுகவின் தோல்வி பயத்தையே இது காட்டுகிறது. இந்த அராஜகத் தாக்குதலில் ஈடுபட்ட ஆளும் கட்சிக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டப் போவது நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisment