TVK leader Vijay Appears again for questioning today in Delhi
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, தவெக நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, சிடிஆர்​.நிர்​மல் குமார், மதி​யழகன் மற்றும் கரூர் மாவட்ட ஆட்​சி​யர் தங்​கவேல், எஸ்​.பி. ஜோஸ் தங்​கையா உள்​ளிட்ட காவல் அதி​காரி​களை டெல்லியில் ஆஜராக வைத்து சிபிஐ அதிகாரிகள் கடந்தாண்டு டிசம்பர் 29ஆம் தேதி விசாரணை நடத்தினர்.
அவர்​களிடம் 3 நாட்​கள் விசா​ரணை நடத்​தப்​பட்டதை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் நேரில் ஆஜராக சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். இதனை ஏற்று, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கடந்த 12ஆம் தேதி டெல்லிக்குச் சென்று சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் இச்சம்பவம் தொடர்பாக சுமார் 100 கேள்விகள் வரை எழுப்பியதாகக் கூறப்பட்டது. காலை 11.30 மணியளவில் தொடங்கிய விசாரணை மாலை 04.15 மணியளவில் நிறைவடைந்தது.
அதனை தொடர்ந்து அடுத்த நாள் ஜனவரி 13ஆம் தேதியும் தொடர்ந்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விசாரணையை ஒத்திவைக்குமாறு விஜய் கோரிக்கை வைத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட சிபிஐ அதிகாரிகள், விசாரணையை தற்காலிகமாக ஒத்திவைத்து இன்று (19-01-26) ஆஜராகுமாறு விஜய்க்கு சம்மன் அனுப்பினர்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், இன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவுள்ளார். அவரிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். முன்னதாக அவர் நேற்று மாலை 4 மணியளவில் தனிவிமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us