TVk leader Vijay anguish for karur stampede incident
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (27-09-25) மூன்றாவது கட்டமாக நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தினார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பரப்புரையில் பங்கேற்ற 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 2 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்படும் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை தூக்கிச்செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளதால் கரூர் அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த துயரச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவுத்துள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விஜய், இந்த துயர சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் எந்தவித கருத்து தெரிவிக்காமல் சென்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செல்ல கரூரில் இருந்து இரண்டு இடத்தில் கார் மாறி திருச்சி விமான நிலைய வளாகத்திற்கு விஜய் வந்தார். அப்போது அங்கு சூழ்ந்திருந்த செய்தியாளர்கள் விஜய்யை சுற்றி நின்று, ‘சார், சார், சார்’ என கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக கருத்துக் கேட்க முயன்றனர். ஆனால் விஜய், எந்தவித பதிலளிக்காமல் விமான நிலையத்திற்குள் விமானம் ஏறச் சென்றார். அதனை தொடர்ந்து, திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 11 மணியளவில் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் கூட பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் விஜய் அங்கிருந்துச் சென்றார்.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.