தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நேற்று (20.09.2025) சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளை விஜய் அடுக்கி இருந்தார். இந்நிலையில் விசிகவை சேர்ந்த எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''எவ்வளவோ இடைத்தேர்தல் வந்தது தவெக போட்டியிடவில்லை. நாடாளுமன்ற தேர்தல் வந்தது உங்கள் கொள்கை எதிரியை நீங்கள் களத்தில் சந்தித்திருக்க முடியும். தற்போது நடித்துள்ள படம் ஓடினால் கண்டினியூ பண்ணுவீர்கள். படம் பிளாப் என்றால் விட்டு விட்டு போய் விடுவீர்கள்.
விஜய் பேசுவது ஒரு புனைவாக இருக்கிறது. செயற்கையாக இருக்கிறது. கட்சி தொடங்குவதும், ரொம்ப தள்ளிக்கொண்டு வந்து களத்தில் விடுவதும், அவர் வரவே மாட்டார், வார இறுதியில் தான் வருவார், எப்போதாவது வருவார். ஏதாவது ஒன்னு பேசுவார். அதுவும் ஸ்க்ரிப்டாக பேசுவார். எதுவும் திடீரென்று பேச சொன்னால் பேசமாட்டார். இப்படி ஒரு வடிவமைக்கப்பட்ட தலைமையாக தவெக தலைமையாக இருக்கிறது. இது தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்தது அல்ல.
மக்கள் பிரச்சனையை நீங்கள் பேசுங்கள். மக்கள் பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு வந்து அதன் மீது அக்கறை கொண்டு நீங்கள் பேசியிருந்தால் நாகப்பட்டினத்தில் இப்படி பொய்யையும் புரட்டையும் பேசிருக்க மாட்டீர்கள். உண்மையிலேயே நாகப்பட்டினத்தில் மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என பேசி இருப்பீர்கள். நாகப்பட்டினத்தில் நிறைவேற்றப்படாத கோரிக்கை என்ன இருக்கிறதோ அதை எடுத்து பேசி இருப்பீர்கள். அது அந்த மக்களுக்கு வலு சேர்க்கும். விஜய்க்கு கூடும் கூட்டம் சினிமா கவர்ச்சிக்கான கூட்டம். சட்டமன்ற கூட்டத்தொடர் எப்பொழுது கூடும் அடுத்தது எந்த பிரச்சனை பேசலாம் என்று தான் நாங்கள் காத்திருக்கிறோம். அது மாதிரி நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் இருக்கிறது. மக்களுக்கு தேவைகள் இருக்கிறது. பல கட்சிகள் பேச வேண்டும். பல தலைவர்கள் பேச வேண்டும். அப்படித்தான் அந்த குரலுக்கு ஒரு பெரிய வலிமை சேரும். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.
அப்படி ஒரு சக்தியாக விஜய் வந்தால் அது மக்களுக்கான அரசியல். ஆனால் அதெல்லாம் பேச மாட்டேன் பொய் தான் பேசுவேன் என்றால் பொய் பேசியவர் என்ன நிலைமைக்கு ஆனார் என்று பார்க்கிறோம். இரண்டு ஐபிஎஸ்கள் தமிழ்நாட்டில் பொய்யையும் புரட்டையும் அன்றாடம் பேசிப் பேசி தமிழ்நாட்டில் இன்று அவர்களுடைய நிலைமை என்ன என்று கண் முன்னால் பார்க்கிறோம். அதுபோல மக்களால் நிராகரிக்கப்படும் நிலைமை தான் விஜய்க்கு வரும்'' என தெரிவித்துள்ளார்.