விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சலவைத் தொழிலாளர்கள் சார்ந்த ஆல் இந்தியா பீப்புள் டெவலப்மெண்ட் பார்ட்டியின் இரண்டாவது தென் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அப்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு அந்தக் கட்சி ஆதரவு வழங்குவதாக நிறுவனத் தலைவர் மாரிச் செல்வம் அறிவித்தார். 

Advertisment

இதனைத் தொடர்ந்து, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சலவைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, “ஒவ்வொரு தேர்தலிலும் திமுக தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்ததை மக்கள் மறந்துவிடவில்லை.டெபாசிட் இழந்த கட்சியே ஆட்சிக்கு வரும்போது, 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்து எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக வருவது நடந்தே தீரும்.  

Advertisment

அதிமுகவைக் குறைத்து மதிப்பிடும் அரசியல் பேச்சுகளுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்க பதில் அளிப்பார்கள். உழைக்கும் மனிதனுக்கு ஐந்து விரல்களே போதும். ஆறாவது விரல் தேவையில்லை. தமிழக அரசியலில் விஜய்யின் த.வெ.க. ஆறாவது விரலாகத்தான் இருக்கிறது. தேர்தல் களத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி, திமுக மற்றும் அதன் கூட்டணி மட்டுமே நேரடியாக மோதும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மற்ற கட்சிகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும்” என்றார்.