கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.
இந்நிலையில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் பொழுது பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று மகனை இழந்த தந்தை பன்னீர்செல்வம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டி உள்ள ஆர்.எஸ்.பாரதி, அது தொடர்பான சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், 'தமிழக வெற்றிக் கழகத்தினரின் நிவாரணத்தை எதிர்பார்த்து பன்னீர்செல்வம் என்பவர் தன்னுடைய மகன் இறப்பை முன்வைத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார். தற்பொழுது வெளிவரக்கூடிய உண்மைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் எதிர் தரப்பினுடைய செயல்பாடுகள் இருக்கிறது. தவெக அளிப்பதாக சொன்ன நிவாரணத் தொகை பணத்திற்காக சிறுவனின் தந்தை வழக்கு தொடுத்துள்ளார் என்ற உண்மையை அந்த சிறுவனின் தாய் வெளிப்படுத்தி உள்ளார். பன்னீர்செல்வத்தின் மனைவி கூறக்கூடிய உண்மைகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
மனைவியையும் மகனையும் விட்டுவிட்டு பல ஆண்டுகளாக தனியாக வாழக்கூடிய பன்னீர்செல்வம் தற்பொழுது துயரத்திற்கு காரணமான தமிழக வெற்றிக் கழகம் அளிப்பதாக சொன்ன நிவாரண பணத்திற்காக வழக்கு தொடுத்துள்ளார் என்ற உண்மையை அவரது மனைவி வெளிப்படுத்தியுள்ளார். மனைவியை இழந்த செல்வராஜ் என்பவரிடம் அதிமுகவின் ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பாலகிருஷ்ணன் என்பவர் மூலம் ஏமாற்றி போலியாக கையெழுத்து பெற்று அவருடைய பெயரில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணை வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தை தவிர்த்து இரண்டு குடும்ப உறுப்பினர்களை வைத்து மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். அந்த இரண்டு பேரில் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூண்டுதலின் பெயரிலும், மற்றொருவர் அதிமுகவை சார்ந்தவர்களின் தூண்டுதலின் பெயரிலும் நீதிமன்றத்தை நாடி தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள்.
கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சில குடும்பகளை அரசியல் உள்ள நோக்கத்திற்காக முறைகேடாக பயன்படுத்தி இழந்தோரை வைத்து அர்ப்ப அரசியல் செய்கிறது தவெக. இதற்கு அதிமுக பாஜகவும் துணை நிற்கிறது. திருப்புவனம் அஜித்குமார் மரண வழக்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில் அஜித்குமார் மரணம் தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கூடாது; உயர்நீதிமன்றம் அமைக்கும் தமிழ்நாடு அரசின் விசாரணைக் குழு தான் விசாரிக்க வேண்டும்என தவெக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஏன் சிபிஐ பின்னாடி ஒளிந்து கொள்கிறீர்கள் என விஜய் பேசினார். இன்று கரூர் தமிழக வெற்றிக் கழகம் சம்பந்தப்பட்ட வழக்கில் இறந்தவர்களின் குடும்பத்திடம் மறைமுகமாக கையெழுத்து பெற்றும், பண ஆசை காட்டியும் சிபிஐ விசாரணை வேண்டும் என வழக்கு தொடங்கியுள்ளது. இதற்கு பாஜக, அதிமுகவின் மறைமுக உதவியை பெற்றுள்ளது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. குற்றவாளிகள், தவறு செய்தவர்கள், ஊழல்வாதிகள் என அனைவரையும் அரவணைத்து தூய்மையாக்க கூடிய வாஷிங்மெஷினான பாஜக பின்னால் ஏன் ஒளிந்து கொண்டு இருக்கிறீர்கள் விஜய் அவர்களே. என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதை போன்ற உங்களது நடவடிக்கைகளே மக்கள் முன்பு காட்டி கொடுத்து விட்டது'' என ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.