பாஜக- அதிமுக கூட்டணியை தொடர்ச்சியாக விமர்சித்து வரும் த.வெ.க. தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரசாத், 'நடிகர் விஜய் ஊழலையும், வாரிசு அரசியலையும் ஒழிப்பதற்காக அரசியலுக்கு வந்தேன் என்று ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் சத்தியம் செய்ததை மறந்தது ஏன்? ஊழல் காங்கிரஸோடு, வாரிசு அரசியல் நாயகன் ராகுல் காந்தியுடன் இணைவதற்கு அழுத்தம் கொடுத்து, நடிகர் விஜய்யை இயக்கும் மிஷனரி கொள்கை ஆசான் யார்?
காங்கிரசுக்கு அழைப்பு கொடுக்கும் அவருடைய அப்பா சந்திரசேகரா? மலேசியாவில் விஜய் ரகசியமாக சந்தித்த, காங்கிரஸ் ராகுலின் நண்பரும், உலக சூதாட்டத் தொழிலின் சக்கரவர்த்தியாக விளங்கும் திரை மறைவு லண்டன் தொழிலதிபரா? உலக அரசியல் நாயகன் நாஞ்சில் சம்பத் விளக்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கொள்கை ஆசான் திருமாவளவன் என்றால்? தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுக்கு யார் கொள்கை ஆசான்?
சீர்திருத்தம் மற்றும் பகுத்தறிவு கொள்கைகளுக்காக ஈரோடு ராமசாமி என்கிற பெரியார், சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டம் மற்றும் சமூக நீதிக்காக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய சிறந்த ஆட்சி மற்றும் கல்விப் பணிக்காக கர்மவீரர் காமராஜர், விடுதலைப் போராட்டத்தில் வீரத்திற்கும் தியாகத்திற்கும் இலக்கணமாக செயல்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் என முதல் மாநாட்டு மேடையிலே இவர்கள்தான் எங்கள் கொள்கை தலைவர்கள் என்று அரசியல் நடிகர் விஜய் அறிவித்தது பொய்யா?
இவர்களுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத, தன்னுடைய கலெக்சன், கரப்ஷன் அரசியலுக்காக தன் இன மக்களையே ஏமாற்றி சுயநல அரசியல் செய்யும் விசிக தலைவர் திருமாவளவன் தான் கொள்கை ஆசான் என்று தமிழக வெற்றி கழகத்தின் துணை பொதுச் செயலாளர் அறிவித்ததின் பின்னணி என்ன? ஆதவ் அர்ஜுனா வி.சி.க.வில் இருந்து விலகி, திடீரென்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து தன்னை தூய்மையான அரசியல்வாதியாக சுத்தப்படுத்திக் கொண்டது போல , விசிக தலைவர் திருமாவளவன் தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை ஆசனாக அறிவிக்கப்பட இருக்கிறாரா?
ஊழல் திமுகவின் ஊது குழலாக இருப்பவர், பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று கட்சி ஆரம்பித்து, விசிக கட்சியை விழுப்புரம், சிதம்பரம் கட்சியாக இரு பாராளுமன்ற சீட்டு களுக்காக திமுகவிடம் அடகு வைத்து, மக்கள் விரோத திமுக அரசின் தவறுகளை, தமிழகத்திற்கு செய்த துரோகங்களை, நிர்வாக சீர்கேடுகளை, மக்கள் படும் அவலங்களை சுட்டிக்காட்டாமல், தட்டிக் கேட்காமல், நீல சாய, அரசியலை கருப்பு சிவப்பில் கரைத்து விட்டு தமிழகத்தையே காக்க வந்த ரட்சகன் போல திருமாவளவன் நீலி கண்ணீர் வடிக்கிறார்.
அனைத்துக் கட்சிகளுக்கும் அறிவுரை சொல்லும் திருமாவளவன் நடிகர் விஜயை தேர்தலில் காங்கிரஸோடு கைகோர்க்க வேண்டும் என்று மறைமுகமாக ஆதார் அர்ஜுனா மூலம் அறிவுரை சொல்வது ஏன்? ஒருபுறம் திமுக, காங்கிரஸ் கூட்டணி? மறுபுறம் காங்கிரஸ், தவெக கூட்டணி? என சீட் பேரத்திற்காக இருநாவளவனாக, நடிகர் கமலையும் மிஞ்சும் விதத்தில் தமிழக மக்களை, அரசியல் கட்சிகளை குழப்புவதாக நினைத்துக் கொண்டு குழம்பிப் போய் பேசி அரசியல் சதுரங்க வேட்டை நாயகனாக செயல்படுகிறார்.
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் என்று துவங்கப்பட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். பல ஆண்டுகளாக நடிகர் விஜயை நம்பியிருந்தவர்கள், மக்கள் நல அரசியலுக்காக நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என்ற நம்பிக்கையில், அர்ப்பணிப்புடன், தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் நம்பி வந்த நேர்மையான, தூய்மையான இலட்சக்கணக்கான ரசிகர்கள், நடிகர் விஜயின் சுயநல அரசியலுக்காக ஆரம்பிக்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.
தமிழக வெற்றி கழக தொண்டர்கள் 41 பேர் உயிர் பலியானதற்கு திமுக அரசு காரணம் என்று கூறிய விஜய் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து நியாயம் கேட்கவில்லை? 41 பேர் குடும்பத்திற்கு நீதி கிடைக்க போராடவில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று பேசி அரசியலுக்கு அழைத்து வந்து, தன்னுடைய திமிரால் அஜாக்கிரதையால், திமுக அரசின் திட்டமிட்ட சதியால் இறந்து போன தொண்டர்களின் ஈரம் காயும் முன்னே ஊழல் வாரிசு கட்சி காங்கிரசோடு கூட்டணி வைக்க பேரம் பேசி வருகிறார்.
தமிழக முதல்வராக தனக்குத்தானே அரசியல் நடிகர் விஜய் பட்டம் சூட்டிக் கொண்டு விட்டார். தற்பொழுது பாஜக அழுத்தம் கொடுக்கிறது என்று நடிகர் விஜய்யும், ஜனநாயகம் திரைப்படத்தை வெளியிட பாஜக தடுக்கிறது என பணநாயகன் ஆதவ் அர்ஜுனாவும் மத்திய மோடி அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள்.
தமிழக வெற்றி கழகம் ஆரம்பித்தவுடன் திடீரென்று, விசிக தலைவர் திருமாவளவன் உடன் அரசியல் நாடக புத்தக வெளியீட்டு விழா, அன்றைய விசிக துணைப் பொதுச் செயலாளர் அனைத்து கட்சி அரசியல் வியாபாரி ஆதவ் அர்ஜுனாவுடன் லாட்டரி அரசியல் ஒப்பந்தம், ஐந்தாண்டு சினிமாவில் நடிக்காமல் தியாகம் செய்ததற்கு,இரண்டு மடங்கு இழப்பீடு பெற்று, தமிழக வெற்றி கழகத்தை லாட்டரி பணத்தில் கரைத்து, முதல்வர் நாற்காலி எனக்கு, தமிழக அரசு, அரசியல் வியாபாரம் உனக்கு என லாட்டரி கிங், அனைத்து கட்சி அரசியல் வியாபாரி ஆதார் அர்ஜுனாவிடம் கட்சி, ரசிகர்கள் ,தொண்டர்கள் உடன் உங்களை உருவாக்கிய புஸ்ஸி ஆனந்தையும், அரசியல் நடிகர் விஜய் அடகு வைத்த வரலாறு வெளிச்சத்துக்கு வரும் நேரம் வந்துவிட்டது.
நடிகர் விஜயின், தமிழக வெற்றி கழகத்தின் விளம்பர பிரிவு மாநில செயலாளர் போல, திருமாவளவன் நாள் தோறும் விஜய்க்கு அறிவுரை சொல்வது போல், நல்வழி காட்டுவது போல் திமுகவை எதிர்க்காமல் தமிழகத்தில் நடக்கும் கொடுங்கோலாட்சியின் அவலங்களைப் பற்றி பேசாமல், பாசிச பாஜக தான் அனைத்திற்கும் காரணம் என்று ஊடகங்களில் ஒப்பாரி வைக்கிறார். தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு பக்கம் தன் பாசத்தை திமுகவிற்கும், மறுபக்கம் நேசத்தை நடிகர் விஜய்க்கு பிரித்துக் கொடுத்துவிட்டு, தமிழக மக்களிடம் வேஷம் போட்டு தன் இருப்பை மட்டும் காட்டிக் கொள்ள, ஊடக வெளிச்சத்துக்காக, விளம்பர, வாக்கு வங்கி தேர்தல் அரசியலுக்காக பத்திரிகையாளர்களிடம் நடத்தி வரும் நாடகம் எடுபடாது.
எதிர் எதிர் துருவங்கள் போல காட்டிக் கொண்டு பாஜகவை எதிர்ப்பதில் மறைமுகமாக ஒன்றிணைந்து, இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படும் அரசியல் நடிகர் விஜயும், ஒரு படத்தில் நடித்திருந்தாலும், தேர்தல் நேரத்தில் புதுப்புது அரசியல் கேரக்டராக, தன் அரசியல் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வரும் திருமாவளவனும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/774-2026-01-29-20-25-31.jpg)