Tvk flags welcomed Edappadi; Is the AIADMK-Tvk alliance solid? Photograph: (tvk admk)
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தின்படி, நேற்று (08.10.2025) நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு, குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
குமாரப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்ட போது த.வெ.க. கொடியைச் சிலர் உயர்த்தி பிடித்தபடி இருந்தனர். இதனைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். கூட்டணி தேவைதான். ஆனால் அதிமுக தலைமையிலே அமைக்கப்படுகின்ற கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.
இங்கே பாருங்கள் கொடி பறக்கிறது (என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்). பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள். எழுச்சி ஆரவாரம். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே குமாரப்பாளையத்தில் நடைபெறுகின்ற கூட்டத்தினுடைய ஆரவாரம் உங்கள் செவியைத் துளைத்துக் கொண்டு செல்ல உள்ளது” எனப் பேசினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாம் நாளாக நாமக்கல் மாவட்டம் ஏ.எஸ்.பேட்டை பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஏ.எஸ்.பேட்டை மைதானத்தை நோக்கி எடப்பாடி பழனிசாமி பயணித்த பேருந்து சென்ற பொழுது அதிமுக தொண்டர்கள் அக்கட்சி கொடியைக் காட்டிய நிலையில் தவெக கொடிகளும் காட்டி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்றை விட இன்று தவெக கொடிகள் அதிகமாகவே தென்பட்டன. இதனால் அதிமுக-தவெக கூட்டணி உறுதியானதாக ஒருபுறம் உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.