கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Advertisment

மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கரூர் சுற்றலா மாளிகையில்  தற்காலிகமாகச் சிபி.ஐ.யின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் கரூரில் தங்கி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி முதல் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள், காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்த உறவினர்கள் என இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருந்தனர். 

Advertisment

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாகக் கரூர் நகரக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணை  பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தேர்தல் பிரச்சார பிரிவு இணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் அக்கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு அடிப்படையில் இவர்கள் 4 பேருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் சார்பில் விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா மற்றும் மதியழகன் என 4 பேரும் நேற்று (24.11.2025) விசாரணைக்கு ஆஜராகியிருந்தனர். 

karur-stampede-cbi-3-members-
கோப்புப்படம்

அப்போது அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி நேற்று இரவு 8 மணி வரை என சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று (25.11.2025) 2வது நாளாக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் மதியழகன் உட்பட 4  பேர் பேரிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தனர் அதன்படி இரண்டாவது நாளாக இன்று இந்த 4 பேரும் சி.பி.ஐ .அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர்.

Advertisment