கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக இருக்கும் என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை கடந்த 3ஆம் தேதி நீதிபதி ஜோதிமணி முன்பு வந்தது. இதில், கூட்டத்தில் ரவுடிகள் புகுந்துவிட்டதாகவும், போலீசார் தடியடி நடத்தியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்றும் மனுதாரர்கள் தரப்பு சார்பில் வாதிடப்பட்டது. அதனை தொடர்ந்து, விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் மனுதாரர்களுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு தரப்பு வாதிட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ஜோதிமணி, தவெக பொதுச் செயலாளார் என்.ஆனந்த், மற்றும் இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரின் முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து, என். ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருவதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக ஆனந்த்தின் செல்போன் பயன்பாடு, உறவினர்கள் மற்றும் நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் தொடர்புடைய பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், 41 உயிரிழந்தது தொடர்பான வழக்கில் என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். முன் ஜாமீன் மனுக்களை விரைந்து விசாரணைக்கு எடுக்கக் கோரி இருவர் தரப்பினரும் நாளை (06-10-25) முறையிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.