அண்மையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு பயணத்தின் பொழுது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு நேற்றே வழக்கை சிபிஐ கையில் எடுத்திருக்கிறது.
இந்த ஆண்டு கட்சி சார்பில் யாரும் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம் என தவெக தலைமை அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியினுடைய மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் யாரும் கட்சி சார்பில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்ற அறிவுறுத்தல் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், துக்கம் அனுசரிக்கும் வகையிலும் விஜய்யின் அறிவுறுத்தல் படி இந்த அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
அதேபோல்கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கரூரில் பாதிக்கப்பட்ட 39 பேரின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் 20 லட்சம் ரூபாயை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய பரிவர்த்தனை மூலம் 39 குடும்பங்களை சேர்ந்தவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகவும், அதேபோல் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோரின் வங்கிக் கணக்குகளில் தலா இரண்டு லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.