TVK District Secretary arrested at Defamation against the judge for Karur Tragedy
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தவெகவின் திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷன் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகன் மற்றும் வெங்கடேஷன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆனந்த் மற்றும் நிர்மல் குமாரை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தள்ளுப்படி செய்யப்பட்டன. அதோடு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகளை வகுக்க கோரி சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மணுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு, அக்டோபர் 3ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தல்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர், ‘கரூர் துயரம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு. விபத்து தொடர்பான வீடியோக்களை பார்த்து வேதனை அடைந்தேன். சம்பவ இடத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் இறந்து கிடந்த போதும் தவெக நிர்வாகிகள் தப்பியோடிவிட்டனர். ஒரு அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது. சம்பவம் நடந்தவுடன் பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர்கள் என அனைவரும் தொண்டர்களையும் தங்களை பின்தொடர்பவர்களையும் கைவிட்டு சென்றுவிட்டனர். அக்கட்சி தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை. ஒரு அரசியல்
கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது. சம்பவத்திற்கான வருத்தம் கூட தெரிவிக்காததே கட்சி
தலைவரின் மனநிலையை காட்டுகிறது’ எனக் கடுமையாக சாடியிருந்தார்.
நீதிபதி செந்தில் குமார் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் மீது சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்கள்
பரப்பப்பட்டு வந்தன. இந்த அவதூறுகளை பரப்பியவர்கள் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி ஏற்கெனவே தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டனி சகாயம் மைக்கேல் ராஜ், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் மற்றும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பணியாற்றும் சென்னையைச் சேர்ந்த சசிகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நீதிபதி செந்தில் குமார் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாக பதிவிட்டதாகக் கூறி திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.நிர்மல் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கைது சம்பவம் தவெகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.