தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கப் புதிதாக 28 பேர் கொண்ட குழுவைத் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கியது. இதுகுறித்த பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் நேற்று (28.10.2025) வெளியிட்டிருந்தார். அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், துணைப் பொதுச்செயலாளர் ராஜ் மோகன் உள்ளிட்ட 28 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இதனையடுத்து இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் இல்லாமல், ஆனந்த் தலைமையில் இன்று (29.10.2025) காலை 11 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “அதிமுகவின் பிரச்சார பொதுக்கூட்டங்களில் த.வெ.க.வின் கொடி பறக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளது பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு சி.டி.ஆர். நிர்மல் குமார் பதிலளித்துப் பேசுகையில், “இது தொடர்பாக நிறைய விஷயங்கள் இந்த ஒரு மாதத்தில் பத்திரிகையாளர்கள் நிறையப் பேரும், எல்லா விமர்சகர்களும் பேசினார்கள். நாங்கள் அமைதியாக இருந்தோம் ஆனால் ஊடகத்தினர் எல்லாம் பல விமர்சனங்கள், பல விவாதங்கள் நடத்தினார்கள். அது எல்லாத்துக்கும் மேலே இப்போது கடைசியில் என்கிட்ட கேள்வி கேட்டு நீங்கள் பதில் சொல்லுங்கள் எனக் கூறுகிறீர்கள். கண்டிப்பாக எங்களுடைய நிலைப்பாட்டில் ஒரு மாதத்திற்கு முன்னால் என்ன நிலைப்பாடோ நான் அன்னைக்கே சொல்லிவிட்டோம் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு மாதத்துக்கு முன்னால் என்ன நிலைப்பாடோ அந்த நிலைப்பாட்டில் இப்போது வரைக்கும் எந்த மாற்றமும் இல்லை.
நாங்கள் அமைதியாக இருந்தோம். நீங்கள் (ஊடகத்தினர்) எல்லாம் விவாதம் செய்துகொண்டு அப்புறம் அதற்குப் பதில் சொல்லுங்கள் என்றால் நாங்கள் எங்கே சென்று பதில் சொல்ல முடியும். நான் ஒரே வரியில் இதற்குப் பதில் சொல்லவேண்டும் முடிவு பண்றேன். ஏனென்றால் திரும்பத் திரும்ப இந்த கேள்வி வருகிறது. ஒரு மாதத்திற்கு முன்னால் என்ன நிலைப்பாடோ அந்த நிலைப்பாட்டில் எங்கள் கட்சியில் எந்த மாற்றமும் இல்லை என்பதைத் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/29/ctr-nirmal-admk-tvk-eps-flag-2025-10-29-15-07-27.jpg)