தவெகவில் விடுபட்ட மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு நேற்று (23-12-25) பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி அஜிதா என்பவர், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை எனக் கூறி விஜய்யிடம் முறையிடுவதற்காக பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைனை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் நேற்று (23-12-25) காலை முதலே காத்துக் கொண்டிருந்தார். ஆனால், அவர்களை கட்சி அலுவலகத்துக்குள் உள்ளே நுழைய விடாமல் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, விஜய் தனது இல்லத்தில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கார் மூலம் வருகை தந்தார். அப்போது அலுவலகம் முன்பு காத்துக் கொண்டிருந்த அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள், முறையிடுவதற்காக விஜய்யின் காரை வழிமறித்து தடுக்க முயன்றனர். ஆனால் விஜய்யின் கார் அங்கு நிற்காமல், அவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது மோதும்படி அதிவேகமாக கட்சி அலுவலகத்துக்குள் சென்றது. விஜய்யின் கார் கட்சி அலுவலகத்திற்குள்ளே சென்ற நிலையில், யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்து போராட்டத்தில் ஈடுபட்ட அஜிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சி.டி.ஆர் நிர்மல் குமார், “விஜய் மக்கள் இயக்கமாக இருக்கும் போது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்திருக்கிறார்கள். அதை கட்சிக்குள் கொண்டு வரும் ஒவ்வொரு மாவட்டத்திலில் 10 முதல் 12 நிர்வாகிகள் அமைக்க வேண்டியிருக்கும். மக்கள் இயக்கமாக இருக்கும் போது 500 முதல் 1000 நிர்வாகிகள் வரைக்கும் இருந்திருக்கிறார்கள். அதனால் அதை சரி செய்யும் போது ஒவ்வொரு இடத்திலும் சில மன வருத்தங்கள் கண்டிப்பாக இருக்கும். ஆனால், உழைத்தவர்கள் யாரையும் எங்களுடைய தலைவர் கைவிட மாட்டார். அவர்களுக்கு தேவையான பொறுப்புகள் வழங்கப்படும்.
முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் கொடுக்காத ஒரு முக்கியத்துவத்தை இன்று காலை முதல் எல்லா டிவி காரர்களும் கொடுக்கிறார்கள். இது சாதாரண நிகழ்வு. எனவே இது சரிசெய்யப்படும். திமுகவை விட எங்களுடைய தவெக மாபெரும் இயக்கம். திமுகவை விட அதிகமான நிர்வாகிகள் எங்கள் கட்சியில் இருக்கிறார்கள். திமுகவில் இருப்பதை விட அதிகமான ஜனநாயகம் எங்கள் கட்சியில் இருக்கிறது” என்று கூறினார்.
இதையடுத்து விஜய் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை தான் திருமாவளவன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சி.டி.ஆர் நிர்மல் குமார், “அண்ணன் திருமாவளவன் மீது நாங்கள் ரொம்ப மரியாதை உள்ளவர்கள். சின்ன வயதில் இருந்தே அவரை பார்த்திருக்கிறோம். அவர் ஒரு பெரிய போராளியாக தன்னுடைய இயக்கத்தை ஆரம்பித்தா. அவர் திமுகவை அழிப்பதற்காக மக்கள் நல கூட்டணி ஒன்றை உருவாக்கினார். அந்த போராட்டத்தில் தோல்வியடைந்ததால் அதற்கு மேல் போராட வலிமை இல்லாமல் ஒரு சமரச அரசியலுக்கு போய்விட்டார். இதனால் அவருடைய முக்கியத்துவம் போய்விட்டது. அவர் எதற்காக அரசியலுக்கு வந்தார் என்றே தெரியாமல் போய்விட்டது. இவ்வளவு தூரம் சமரசன்ம் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. தன்னை சார்ந்த ஒரு சமுதாய மக்களுக்கு இதுவரை அவர் என்ன செய்திருக்கிறார். அவரால் எதுவும் குரல் கொடுக்க முடியவில்லை. பட்டியலின சமுதாயத்தை சேர்ந்த அவர், அந்த சமுதாயத்திற்கு குரல் கொடுத்திருப்பாரா? இதுவரைக்கும் இந்த அரசாங்கத்தால் பாதிக்கப்பட்ட பட்டியலின சமுதாய மக்களுக்கு குரல் கொடுக்காத திருமாவளவன், எங்களுடைய தலைவர் திமுகவை பற்றி பேசினால் அவர் திமுகவிற்காக குரல் கொடுப்பது மிகவும் வருத்தமான செய்தி. திமுக மாவட்டச் செயலாளர் செய்ய வேண்டிய வேலையை அவர் செய்து கொண்டிருக்கிறார்.
அடிமைத்தனத்தில் இருந்து மீட்பேன், சுய மரியாதையை கொண்டு வருவேன் என்று சொல்லி ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டு, இன்று அவரையும் சேர்த்து அவருடைய தொண்டர்களையும் திமுகவில் அடமானம் வைத்துவிட்டார். தயவு செய்து அண்ணன் திருமா என்ன நோக்கத்துக்காக ஒரு போராளியாக வந்தார் அவரை பார்த்து பல பேர் நாங்கள் எல்லாம் வியந்தோம். அவர் இனிமேலாவது தன்னை மாற்றிக்கொண்டு அவர் எதற்காக இந்த அரசியலுக்கு வந்தார் என்பதை உணர்ந்து பேச வேண்டும், செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/24/thiructr-2025-12-24-07-45-49.jpg)