மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கும் இந்த மாநாடு இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினமே (19.08.2025) மதுரைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டு திடலுக்கு தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர். அதன்படி விடியற்காலையிலேயே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம் அங்கு வருகை தந்துள்ள தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென மாநாட்டு திடலுக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அப்போது எந்தவிதமான எச்சரிக்கை ஒலியும் இல்லாமல் ஆம்புலன்ஸ் செல்வதைப் பார்த்த போலீசார் அதனை தடுத்து நிறுத்தி உள்ளே சென்று சோதனை செய்தனர். அதில் கட்சி துண்டு அணிந்த தொண்டர்கள் உள்ளே இருந்துள்ளனர். அதாவது த.வெ.க. தொண்டர்கள் மாநாட்டுத் திடலுக்குள் ஆம்புலன்ஸ் மூலம் நுழைய முயன்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். மாநாட்டிற்கு ஆம்புலன்சில் வந்த த.வெ.க. தொண்டர்களால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.