கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏற்பட்ட குட்ட நெரிசல் காரணமாக மூச்சு திணறி 41 நபர்கள் உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அனைவரும் தற்போது வீடு திரும்பி உள்ளனர்.  

Advertisment

இந்த நிலையில், நேற்று முன்தினம் மற்றும் நேற்று கரூர் மாவட்டத்தில் உயிரிழந்த 33 பேரின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் வீடியோ கால் மூலம் ஆறுதல் கூறியுள்ளதாகவும், விரைவில் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து கரூரில் இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ள தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கரூர் பேட்டி அளித்துள்ளார்.

Advertisment

இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “இன்று கரூர் மாவட்டத்தை தாண்டி உள்ள சில குடும்பத்திற்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் பேச இருப்பதாகவும், கரூரில் மக்களை சந்திக்க இருப்பதாகவும் நேற்று ஈமெயில் மூலமாக டிஜிபிக்கு மனு கொடுத்துள்ளோம், இன்று நேரில் வழங்க உள்ளனர். பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த  அனுமதி கேட்டுள்ளோம் அதனை முடித்த பிறகு வருவதற்கான ஏற்பாடு செய்ய முடியும். ஏனென்றால் இன்னொரு முறை இது போன்ற அசம்பாவிதம் நடப்பது யாருக்குமே நல்லது இல்லை என்று பாதுகாப்புடன் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளார்” என்று கூறினார்.

இதையடுத்து, விஜய் மீது தற்போது வரை யாரும் குற்றம் சாட்டவில்லை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அதுதான் உண்மை, அன்பினால் தான் மக்கள் வந்தார்கள். நாங்கள் மக்களை சந்தித்தபோது நீங்கள் தைரியமாக இருங்கள் என்று கூறினர். குறிப்பாக கட்சியின் மீதும் தலைவரின் மீதும் அவர்களுக்கு தவறான எண்ணம் இல்லை. அதுதான் உண்மை, இங்கு என்ன நடந்தது என்று மக்களுக்கு ஒரு எண்ணங்கள் இருக்கிறது, சில நம்பிக்கைகள் இருக்கிறது” என்று கூறினார். அரசினுடைய நடவடிக்கை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு, “இந்த நேரத்தில் அதைப்பற்றி பேசினால் சரியாக இருக்காது விசாரணை நடக்கட்டும் பார்க்கலாம்” என கூறினார்.

Advertisment