TVK administrators blocked Vijay's car but they drove towards without stopping
கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி மாநாடு, மக்கள் சந்திப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே அவர், தொடர்ச்சியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். குறிப்பாக அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற வீதம் மாவட்டச் செயலாளர்களை நியமித்தார்.
இதில் பல மாவட்டங்களில் பதவி தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டதால் ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற எண்ணிக்கை அடிப்படையில் மொத்தம் 131 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. 120 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கு பல மாதங்களாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படாத சூழலே இருந்தது. இதனால் கட்சிக்குள் பல சலசலப்பு ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் தவெக நிர்வாகி அஜிதா என்பவர், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என பனையூரில் உள்ள அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். தொடக்க காலத்தில் விஜய் ஆரம்பித்த விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே பல்வேறு பணியாற்றி வந்த அஜிதா, கட்சி தொடங்கிய பின் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மாற்று கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த வேறு ஒருவருக்கு பதவி வழங்கப்படவுள்ளதாக அண்மை காலமாக செய்திகள் வெளியாகின. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி மோதல் ஏற்பட்டது. பல கட்டங்களாக தவெக சார்பில் நடந்து வரும் கூட்டங்களில் தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்த அஜிதாவுக்கு, ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது.
இந்த நிலையில் விடுப்பட்ட மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்களுக்கு இன்று (23-12-25) பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று, பொறுப்பு வழங்கப்படுபவர்களுக்கு பொறுப்பு நியமன ஆணைகளை வழங்கவுதாக இருந்தது. இதனை அறிந்த அஜிதா தனது ஆதரவாளர்களுடன் இன்று (23-12-25) பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சித் தலைவர் விஜய்யை சந்தித்து முறையிட வந்துள்ளார். அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் கட்சி அலுவலகம் முன்பு அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியே காலையில் இருந்தே காத்துக்கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் தனது இல்லத்தில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கார் மூலம் வருகை தந்தார். அப்போது அலுவலகம் முன்பு காத்துக் கொண்டிருந்த அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள், முறையிடுவதற்காக விஜய்யின் காரை வழிமறித்து தடுக்க முயன்றனர். ஆனால் விஜய்யின் கார் அங்கு நிற்காமல், அவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது மோதும்படி அதிவேகமாக கட்சி அலுவலகத்துக்குள் சென்றது. விஜய்யின் கார் கட்சி அலுவலகத்திற்குள்ளே சென்ற நிலையில், யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us