கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி (27.09.2025) நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த சம்பவத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

Advertisment

அதேசமயம் கூட்ட நெரிசலில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (13.10.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள், “ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.

Advertisment

அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும். விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அஜய் ரஸ்தோகி முடிவு செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை கரூர் மாவட்ட குற்றவியல் நீதிபதி பரத்குமாரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் ஒப்படைத்துள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவத்தில் கரூர் மாவட்டச் செயலாளர், மதியழகன், நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர். மதியழகனை இரண்டு நாட்கள் காவலில் எடுத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். அதேபோல் கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாதது தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் நீதிமன்ற காவலில்  திருச்சி சிறையில் உள்ள நிலையில்  வெங்கடேசன் கொடுத்த ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது.  

Advertisment