தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி அஜிதா என்பவர், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைனை அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்தே பல்வேறு பணியாற்றி வந்த அஜிதா, கட்சி தொடங்கிய பின் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பனையூரில் நேற்று முன்தினம் (23.12.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று, பொறுப்பு வழங்கப்படுபவர்களுக்கு பொறுப்பு நியமன ஆணைகளை வழங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை அறிந்த அஜிதா தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று விஜய்யை சந்தித்து முறையிட இருந்தார். அப்போது அவர்களை பவுன்சர்கள் தடுத்து நிறுத்தியதால் கட்சி அலுவலகம் முன்பு அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காத்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, விஜய் தனது இல்லத்தில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கார் மூலம் வருகை தந்தார்.
அப்போது அலுவலகம் முன்பு காத்துக் கொண்டிருந்த அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள், முறையிடுவதற்காக விஜய்யின் காரை வழிமறித்து தடுக்க முயன்றனர். ஆனால் விஜய்யின் கார் அங்கு நிற்காமல், அவரை தடுத்து நிறுத்தியவர்கள் மீது மோதும்படி அதிவேகமாக கட்சி அலுவலகத்துக்குள் சென்றது.விஜய்யின் கார் கட்சி அலுவலகத்திற்குள்ளே சென்ற நிலையில், யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகைய பரரப்பான சூழலில் தான் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளராக சாமுவேல் ராஜ் என்பவர் நியமனம் செய்யப்பட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/25/ajeetha-tvk-2025-12-25-17-17-55.jpg)
இந்நிலையில் அஜிதா, 15க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தன்னை மாற்றுக் கட்சியைச் சார்ந்த கை கூலி என த.வெ.க.வைச் சேர்ந்த பலர் குற்றம்சாட்டிப் பேசுவதால் இந்த முடிவை அவர் எடுத்ததாக அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கு முயன்றதாக அஜிதாவை, அவரது வீட்டிற்கு அருகில் உள்ள முதலுதவி மையத்திற்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Follow Us