விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் கலந்து கொண்டு உரையாற்றி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், "தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் நிர்வாகிகளுக்கு உறுதுணையாக இருக்கும். என் தொகுதியைத் தாண்டி என்னை யாருக்கும் தெரியாது, ஆனால் இன்று தமிழகம் முழுவதும் என்னைத் தெரிந்திருக்கிறது என்றால், அதற்கு விஜய் மட்டுமே காரணம். வரவேற்பு கொடுப்பது, பேனர் வைப்பது அனைத்தும் எனக்காக அல்ல, முழுக்க முழுக்க விஜய்க்காக மட்டுமே. எங்களின் முகவரி விஜய். விஜய் என்ற மூன்று எழுத்துகளே எங்களுக்கு முகவரி. அவரால்தான் நாங்கள் இந்த எளிய மக்களுக்கு சேவை செய்யும் ஒரு கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது. தமிழர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் அண்ணனாக, தம்பியாக, அனைவரின் வீட்டுப் பிள்ளையாகப் பாசத்துடன் கொண்டாடப்படும் எங்கள் மதிப்பிற்குரிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய். 2026-ல் விஜய் முதல்வராக அமர்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

92

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பல ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் கட்சி தமிழக வெற்றிக் கழகம். விலையில்லா மருந்தகம், குருதி வங்கி, பயிலகம், நூலகம், விலையில்லா வீடு கட்டும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தாய்மார்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 2026-ல் விஜய் முதல்வராக உறுதியாக அமருவார். அதற்காகவே நாங்கள் உழைத்து வருகிறோம். தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று சிறு சிறு பிரச்சனைகளைத் தீர்க்கும் தொண்டர்களாக உள்ளனர். சாலை வசதி, மின்விளக்கு போன்ற சிறிய விஷயங்களைக் கூட இந்த அரசு செய்யவில்லை. தமிழக வெற்றிக் கழகம் எங்கு பொதுக்கூட்டம் நடத்தினாலும் அதிகமாக வருவது தாய்மார்கள்தான். தாய்மார்களுக்கு நாங்கள் எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய். உங்களை நம்பி 2026 தேர்தல் களத்திற்கு வருகிறோம். உங்களுக்கு எங்கள்மீது நம்பிக்கை உள்ளது, விஜயை 2026-ல் முதல்வராக நீங்கள் அமரவைப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது," என்றார்.

Advertisment

கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த மேல்மலையனூர் ஒன்றியத் துணைச் செயலாளராக இருந்த சரண்ராஜ், தனது பதவி பறிக்கப்பட்டதற்கு நீதி வேண்டும் எனக் கோரி, "கழகமே நீதி வேண்டும், குறைகளைக் கேட்க வேண்டும், செஞ்சி தொகுதி நிர்வாகிகளின் பிரச்சனையைக் கேள்" என்ற வாசகம் அடங்கிய பதாகைகள் மற்றும் பேனர்களுடன் முழக்கமிட்டார். அப்போது, அங்கிருந்த மேல்மலையனூர் ஒன்றியச் செயலாளர் திருமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள், சரண்ராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தடுத்து, பதாகைகள் மற்றும் பேனர்களைப் பறித்து எரித்தனர். அப்போது, விஜய்யின் படத்துடன் இருந்த பதாகையை தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் சிலர் காலால் மிதித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதனால், நலத்திட்ட உதவிகளை முழுமையாக வழங்க முடியாமல், பொதுச் செயலாளர் ஆனந்த் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு மட்டுமே ஆன நிலையில், அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் வெளிப்படையான மோதலாக மாறியுள்ளது.