TTV Dinakaran takes action against Deputy General Secretary for Opposition to AIADMK alliance
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அதனை தொடர்ந்து பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதை அடுத்து அந்த கூட்டணியில் அவர் இணைந்து கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இந்த சூழ்நிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக மீண்டும் பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி அமைத்தது. அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகியதை தொடர்ந்து, முதல்வர் வேட்பாளர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என பா.ஜ.கவும், அதிமுக தொடர்ந்து கூறி வருகிறது.
கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என அறிவிக்கப்பட்டதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக வெளியேறினார். ஆனாலும், டிடிவி தினகரனை மீண்டும் கூட்டணிக்குள் இணைக்கும் முயற்சியில் பா.ஜ.க தொடர்ந்து ஈடுபட்டு வந்தது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை அந்த கூட்டணியில் இணைய மாட்டேன் என டிடிவி தினகரன் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் கூறி வந்தார். மேலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் நடக்கும், அமைச்சரவையில் அமமுக இடம்பெறும் என்று கூறி வந்தார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பரப்புரை கூட்டத் தொடக்க விழா இன்று (23-01-26) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளை கூட்டணி தலைமை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் பிற கட்சிகளை இணைக்கும் முயற்சியில் அதிமுக, -பா.ஜ.க ஆகிய கட்சிகள் கடந்த சில தினங்களாக ஈடுபட்டு வந்தது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் (21-01-26) தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சரும், தமிழக பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலை டிடிவி தினகரன் சந்தித்து அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடக்க விழாவில் டிடிவி தினகரன் பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில், அதிமுக கூட்டணிக்கு அமமுக துணைப் பொதுச் செயலாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கட்சியில் இருந்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கியுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us