அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (02-12-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், எடப்பாடி பழனிசாமி பெரிய தலைவர் இல்லை என்று செங்கோட்டையன் கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவதற்கு முன்பு யாருக்கும் அவரை அவ்வளவாக தெரிந்திருக்காது. அவர் அமைச்சரானதே 2011இல் தான். 1989இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால், செங்கோட்டையன் 1972இல் இருந்தே பொறுப்பில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் காலத்திலேயே 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். செங்கோட்டையனின் வரலாறு பழனிசாமியை விட எல்லா விதத்திலுமே சீனியர் தான்.
எடப்பாடி பழனிசாமி துரோகமும் பொய்யையும் தவிர எதுவும் பேச தெரியாதவர். ஜெயலலிதாவால் சட்டமன்ற உறுப்பினர்களாக ஆனவர்களை, முதலமைச்சராக ஆக்கிய ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு துரோகம் செய்கின்ற விதமாக அவர்களை தகுதி நீக்கம் செய்தார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்லாமல், 50 ஆண்டு கால வரலாறு உடைய செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியதால் அவர் இன்றைக்கு வேறு ஒரு கட்சியில் சேர்ந்திருக்கிறார். அண்ணன் செங்கோட்டையன் அமைதியானவர், மென்மையானவர் தான், ஆனால் ரொம்பவும் அழுத்தமானவர். இத்தனை நாட்களாக அவர் யோசித்து அந்த முடிவை எடுத்திருக்கிறார் என்றால் பழனிசாமிக்கு பாடம் புகட்டுவதற்கு அவர் தயாராகிவிட்டார். துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுப்பதற்கு அவர் தயாராகிவிட்டார் என்பது தான் அவரின் நடவடிக்கையில் தெரிகிறது” என்று கூறினார்.
இதையடுத்து தவெக கட்சியில் சேர்ந்த பிறகும் செங்கோட்டையன் ஜெயலலிதா புகைப்படம் வைத்திருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறதே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இதில் என்ன பேசுபொருள்? ஜெயலலிதாவின் தொண்டர் அவர். அவர் சேர்ந்திருக்கக்கூடிய கட்சியில் கூட எம்.ஜி.ஆர் படத்தை தான் வைத்திருக்கிறார்கள். அதனால், ஜெயலலிதாவின் படத்தை வைத்திருக்க நீங்க பெருமைப்படணும். மறைந்த தனது தலைமைக்கு எவ்வளவு நன்றி உணர்ச்சியோடு இருக்கிறார் என்பதை தான் அது வெளிப்படுத்துகிறது. இது எங்களுக்கெல்லாம் பெருமையாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எந்த இயக்கத்துக்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால் அவர்கள், தலைவர்கள் மீது உள்ள மரியாதையில் அவர்களின் படத்தை வைத்திருப்பதோ, அவர்களின் நினைவிடத்திற்கு செல்வதோ அவர்களின் உண்மையான மனநிலையை காட்டுகிறது” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/ttv-2025-12-02-19-06-53.jpg)