தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (04.10.2025) செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு சரியாகத்தான் செயல்பட்டு வருவதாகத்தான் நான் நினைக்கிறேன். முதலமைச்சருக்கு யாரையும் கைது செய்துவிட வேண்டும் என்கிற நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அன்றைக்கு ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் கேட்டபோது கூட நாங்கள் விசாரணை ஆணையத்தின் அறிக்கை வந்த பிறகுதான் இது குறித்து முடிவெடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்.
41 உயிர்கள் அநியாயமாக இழந்துவிட்டோம். உயிரிழப்பு குறித்து எப்.ஐ.ஆர். போட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனால் கைது செய்ய வேண்டிய அவசியமும் அரசாங்கத்துக்கு இருக்கிறது. இது ஏதோ நான் அரசாங்கத்துக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று இல்லை. இங்கு நடப்பது பற்றி உங்களுக்குத் தெரியும். நடுநிலையோடு, ஒரு குடிமகனாக பார்க்கும்போது எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. இந்த சம்பவத்தை த.வெ.க.வினர் ஒன்றும் திட்டமிட்டுச் செய்யவில்லை. இது ஒரு விபத்து தான். த.வெ.க.வினர் கூட்டம் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அந்த ஆர்வத்தில், அக்கட்சியின் தலைவர் வரும்போது நிறையக் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்றெல்லாம் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அனுபவம் குறைவினால் அவர்களுக்கு அவ்வளவு தொண்டர்கள் வந்திருக்கின்ற இடத்தில் அவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளைச் செய்யவில்லை. அமமுகவினர் கூட்டம் போட்டால், ஆர்ப்பாட்டம் அறிவித்தால் வெயில் நேரமாக இருந்தால் கூட அவர்களுக்கு எல்லாம் குடிக்கத் தண்ணீர் பிஸ்கட் எல்லாம் கொடுப்போம்.
எல்லா கட்சிகளும் இதனைச் செய்வார்கள். இது த.வெ.க. நிர்வாகிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். இது கூட அவர்கள் வேண்டும் என்று செய்யவில்லை என்று சொல்லவில்லை. விஜய் இந்த விபத்தைப் பார்த்தது மிகவும் மனது உடைந்து போயிருப்பார். இது எல்லோருக்கும் உள்ளது தான். முதல்வர் சொன்னது போல எந்த தலைவருமே அவர்களின் கட்சித் தொண்டர்களோ, நிர்வாகிகளோ இறப்பதை யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விரும்பமாட்டார்கள் என்று அவர் எதார்த்தமாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் நான் நினைக்கிறேன் விஜய் இதற்குத் தார்மீக பொறுப்பேற்றிருந்தால் நேற்று நீதிமன்றம் கூட அவர் மீது கண்டனங்கள் தெரிவித்திருக்கிறது.
தார்மீகப் பொறுப்பேற்று இருந்தால் ஒருவேளை பலி நம் மீது வந்துவிடுமோ என்று அவருடைய ஆலோசகர்களோ, இல்லை சொன்னதினால் அவர் அப்படிப் பேசி இருப்பாரோ அப்படி என்று தான் நான் நினைக்கிறேன். இதில் யாரையும் நான் சப்போர்ட் செய்து சொல்லவில்லை. அதில் தார்மீகப் பொறுப்பு த.வெ.க.வுக்கு தான் இருக்கிறது. அவர்கள் ஒன்றும் திட்டமிட்டு எந்த முயற்சியும் செய்யவில்லை என்றாலும் தார்மீகப் பொறுப்பை த.வெ.க. ஏற்றிருந்தால் அதன் தலைவர் ஏற்றிருந்தால், இவ்வளவு தூரம் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கூட இவ்வளவு வருத்தம் தெரிவித்தும், கண்டனம் தெரிவித்திருக்கும் அளவுக்குச் சென்றிருக்காது ”எனத் தெரிவித்தார்.