தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தின்படி, கடந்த 8ஆம் தேதி (08.10.2025) நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 

Advertisment

அதன் ஒரு பகுதியாக குமாரப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது த.வெ.க. கொடியை சிலர் உயர்த்திப்பிடித்தபடி இருந்தனர். இதனைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். கூட்டணி தேவைதான். ஆனால் அதிமுக தலைமையிலே அமைக்கப்படுகின்ற கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும். இங்கே பாருங்கள் கொடி பறக்கிறது (என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்). பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள். எழுச்சி ஆரவாரம். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே குமாரப்பாளையத்தில் நடைபெறுகின்ற கூட்டத்தினுடைய ஆரவாரம் உங்கள் செவியைத் துளைத்துக்கொண்டு செல்ல உள்ளது” எனப் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் திருவண்ணாமலையில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “மதுரை மாநாட்டில் கூட விஜய், ‘எங்கள் (த.வெ.க.) தலைமையில்தான் ஆட்சி அமையும். எங்கள் தலைமையை ஏற்று கூட்டணிக்கு வாருங்கள்’ என்றுதான் சொல்கிறார். மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறார். அப்படியென்றால் பழனிச்சாமி விஜய்யின் தலைமையை ஏற்று அந்த கூட்டணியில் செல்வதற்குத் தயாராகிவிட்டார். அந்த அளவுக்கு எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக பலவீனமாகிக் கொண்டு வருவதைத் தான் காண்பிக்கிறது. ஒரு கட்சியைக் கூட்டணி குறித்துப் பேசுவது, கூட்டணிக்கு அழைப்பு விடுவது என்பது வேறு. அதிமுக தொண்டர்களை வைத்து எடப்பாடி பழனிசாமி த.வெ.க. கொடியை தூக்கிப் பிடித்து அது ஊடகங்கள் எல்லாம் அது வெட்ட வெளிச்சமாக வந்தது. 

eps-rally-kumarapalayam

பழனிசாமி நம்பகத்தன்மையற்றவர். துரோகத்தைத் தவிர அவருக்கு வேறு எதுவும் தெரியாது. இப்பவும் அவருக்கு விஜய் கூட்டணிக்கு வந்தால் பாஜகவைக் கூட கழட்டிவிடத் தயாராக இருப்பார். ஆனால் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால் அவர் (விஜய்) தலைமையில் கூட்டணி அமைக்க வேண்டும், அவர் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என்பதுதான் அவர் கட்சியின் கோட்பாடு. திரை உலகத்தில் இவ்வளவு உச்சபட்ச நடிகராக இருந்து நிறைய ஏர்னிங்ஸ் எல்லாம் பெற்றுக்கொண்டிருந்த விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அப்படியென்றால் பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்காக அவர் கட்சி ஆரம்பித்திருக்கிறாரா?. அவரின் தொண்டர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா? இல்லை, விஜய்தான் இவரோடு (எடப்பாடி பழனிசாமி) கூட்டணிக்கு வந்து பழனிசாமியை முதலமைச்சராக தூக்கி பிடிப்பாரா?” என அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.

Advertisment