அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையம் இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இன்று (01.11.2025) ஆலோசனை மேற்கொண்டார் அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், “அதிமுக இயக்கத்தை சிந்தாமல் சிதறாமல் மீண்டும் இந்த இயக்கம் வழிநடத்தச் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் என்னை உறுப்பினராக இன்றைக்கு நீக்கினாலும் கூட விதியின் அடிப்படையில் என்னை நீக்கவில்லை. 

Advertisment

அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை விரைவில் அறிவிப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து நான் இந்த கட்சியிலே (அதிமுக) இயங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். அதற்குப் பிறகு நீக்கியதற்கு என்ன காரணம்?, விதிகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அதற்கான முடிவுகளை வழக்கறிஞரோடு கலந்து பேசி முடிவுகளை நான் மேற்கொள்ள இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார். 

Advertisment

இதற்குப் பதிலளிக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப்  பேசினார். அதில், “பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டரோடு இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்தால் தலைமை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். இது ஏதோ நான் எடுத்த நடவடிக்கை மாதிரி எழுதக்கூடாது. இது மூத்த தலைவர்களோடு கலந்து பேசி, சட்டதிட்ட விதியின்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

eps-sengottaiyan

இந்நிலையில் மதுரை சோழவந்தானில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஜெயலலிதாவின் பாதுகாப்பையும், அவர் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால் செங்கோட்டையன் வந்து ஓகே சொன்னால் தான் ஜெயலலிதா வருவார். அந்த அளவுக்கு ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவரைக் கட்சியை விட்டு நீக்குகின்ற தகுதி பழனிச்சாமிக்கு இல்லை. 

Advertisment

அதற்குக் காரணம் அவர் (செங்கோட்டையன்) ஒன்றும் கட்சிக்கு எதிரான எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எல்லாரையும் (அதிமுகவிற்கு) வாருங்கள் என்று தான் கூப்பிடுகிறார். எங்களையும் அவர் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசும்போது எல்லாம் என்ன மனமாற்றத்தில் இருந்தார்கள் என்றால் நாம் எல்லாம் ஒன்றாகச் செயல்பட்டால்தான் எதிரிகளை வீழ்த்த முடியும் என்று சொல்லக்கூடியவர் அவர்” எனப் பேசினார்.