பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி நேற்று (07.01.2026) காலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அதிமுக - பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

Advertisment

அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் இந்த ஆலோசனையானது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் கூடுதலாக எந்தெந்த கட்சிகள் இடம்பெற உள்ளது, தொகுதிகள் இறுதி செய்யப்பட வேண்டியது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமியிடம், மத்திய அமைச்சர் அமித்ஷா தொகுதிப் பங்கீடு தொடர்பாக கறாராகப் பேசியதாகத் தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

அதாவது கூட்டணியில் 56 தொகுதிகள் ஒதுக்கவும், ஆட்சி அமைந்தால் 3 அமைச்சர் பதவிகளை வழங்கவும் மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அதே சமயம் அதிமுக தரப்பில், பாஜகவிற்குக் கடந்த சட்டமன்ற தேர்தலில் 20 சட்டமன்றத் தொகுதிகள் தான் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் இந்த முறை 25 இல் இருந்து 30 சட்டமன்றத் தொகுதிகள் வரை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்க அதிமுக விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

eps-amitsha-sitting

இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேரில் சந்தித்துப் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இந்த சந்திப்பின் போது தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக டி.டி.வி. தினகரன் பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றதாகவும், அங்கிருந்து கிருஷ்ணமயன் சாலையில் உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் அவரை சந்தித்துப் பேசியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment