எம்.ஜி.ஆரின் பெயரும், புகைப்படமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலிருந்து எம்.ஜி.ஆரின் பெயரும் புகைப்படமும் நீக்கம் தமிழுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவரின் பெயரை மறைக்க முற்படுவது அற்பத்தனமானது. 

Advertisment

தாய்மொழியாம் தமிழுக்கு என்று தனிப் பல்கலைக்கழகம் என்ற தமிழறிஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் 1981ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தஞ்சையில் நிறுவப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில், அவருடைய பெயரும், புகைப்படமும் நீக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தொடங்கி, சங்கம் வளர்த்த மதுரையில் உலகத் தமிழ் மாநாடு வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

Advertisment

இதன் மூலம் உலகத் தமிழர்கள் மனதில் நீக்கமற நிறைந்திருக்கும் எம்.ஜி.ஆரின் பெயரையும், புகைப்படத்தையும் நீக்கி அவருடைய புகழுக்கும், பெருமைக்கும் இழுக்கு ஏற்படுத்த முற்படுவது அற்பத்தனமான அரசியலாகும். எனவே, தமிழ் மொழிக்குத் தொண்டாற்றுவதை தனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதிய எம்.ஜி.ஆரின் பெயரும், புகைப்படமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.