அதிமுகவில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமைகள் மீட்பு குழுவை நடத்தி வருகிறார். ஆனாலும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் அதிமுகவில் தன்னை இணைத்துகொள்ள வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அந்த கோரிக்கையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் நிராகரித்து வருகின்றனர்.

Advertisment

அதிமுகவில் இணையவில்லை என்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கூட்டணியிலும் அவர் தற்போது வரை இணையவில்லை. அதற்கு பா.ஜ.க எந்தவித சமிக்ஞையும் காட்டவில்லை. இம்மாத முடிவுக்குள் அரசியல் நடவடிக்கை குறித்து அறிவிப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வந்த நிலையில் தற்போது வரை எந்தவொரு அறிவிப்பும் அவர் வெளியிடவில்லை.

Advertisment

இந்த நிலையில் பன்னீர்செல்வத்தின் முகத்திரை கிழியும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார். மதுரையில் இன்று (14-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரனிடம், ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவாரா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அவர் தான் முடிவெடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கு அவரின் வழி வந்தவர்கள் என்று சொல்பவர்கள், ஜெயலலிதாவுடைய ஆட்சி அமைய வேண்டும், ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னவர்கள் யாராக இருந்தாலும் இந்த முறை ஜெயலலிதாவின் ஆட்சி அமைவதற்கு அதிமுக தலைமையில் தமிழ்நாட்டில் அமைந்திருக்க்கும் எங்களது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவளிப்பார்கள். அப்படி இல்லை என்றால் அவர்களுடைய முகத்திரை கிழிந்துவிடும். பிரிந்து கிடந்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் இன்றைக்கு ஓரணியில் திரண்டிருக்கிறோம்.

இன்னும் ஒரு சில பேர் வெளியில் இருப்பவர்கள் தங்களுக்கு என்ன பலன் என்பதை பார்க்காமல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று கடந்த ஏழு எட்டு ஆண்டுகளாக அவர்கள் சொல்லி வருவது உண்மை என்றால், அவர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் அவர்களை புறம் தள்ளிவிடுவார்கள். ஜெயலலிதாவின் தொண்டர்கள் அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவிடுவார்கள்” என்று தெரிவித்தார். 

Advertisment