TTV Dhinakaran says We are going to be part of the coalition government
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு, விருப்ப மனு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சாவூரில் அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று (05-01-25) நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பிரிவினைவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
அதனை தொடர்ந்து, அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் பற்றிய தீர்மானத்தின் போது பெரும்பாலான உறுப்பினர்கள் கைதட்டி ஆதரவளித்தீர்கள். நமது நிலைப்பாடு எந்த ஒரு கட்சிக்கும், அமைப்புக்கும் எதிரானது அல்ல. தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது. அது தொடர்ந்து என்றென்றும் இருக்க வேண்டும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் நாம். தேர்தல் வெற்றிகள் அல்லது தங்கள் கொள்கைகளுக்காக ஜாதி, மதங்களை அல்லது கடவுளின் பெயரை எந்த ஒரு அரசியல் இயக்கமும் எந்த ஒரு அமைப்பும் பயன்படுத்தி இங்கு சகோதர சகோதரிகளாக வாழ்கின்ற, மதங்களை கடந்து நட்போடு வாழ்கின்ற அமைதி பூங்காவாக திகழ்கின்ற தமிழ்நாட்டிலே எந்த ஒரு குழப்பமும் வந்துவிடக்கூடாது.
தமிழ்நாட்டின் பொது அமைதி கெட்டுவிடக்கூடாது என்பதில் தேர்தல் வெற்றி தோல்விகளை எல்லாம் தாண்டி செயல்பட்டு கொண்டிருக்கின்ற இயக்கம் அமமுக. 2021 தேர்தலில் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நான் கூட தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அதை புரியாதவர்கள் அன்றைக்கு ஆட்சியை கோட்டை விட்டார்கள். ஆட்சி அதிகாரம் முக்கியம் தான். ஆனால், லட்சியத்திற்காக நாம் ஏற்றிருக்கின்ற கொள்கைகளுக்காக நமது தலைவர்களின் கொள்கைகளை தொடர்ந்து அடுத்த நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற லட்சியத்தோடு என்னோடு லட்சோப லட்சம் சகோதர சகோதரிகள் தமிழ்நாடு முழுவதும் இணைந்திருக்கின்றீர்கள். எம்.பி, எம்.எல்.ஏக்களை விட நமக்கு லட்சியம் தான் முக்கியம்.
பதவிக்காக சில பலர் பல் இளித்துக் கொண்டு எங்கே சென்றாலும் இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கம் உயிரோட்டத்தோடு இருக்கிறது. எத்தனையோ சதவீதம் வாக்கு வைத்திருப்பவர்கள் எல்லாம் புதிதாக ஒரு கட்சி வந்த பிறகு எப்படி எல்லாம் பிதற்றுகிறார்கள், எப்படி எல்லாம் கதறுகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் உங்களில் ஒருவனான நான் எதற்கும் அஞ்சாமல் ஜெயலலிதா காட்டிய பாதையில் பயணிக்கிறேன். நமக்கு யாரை கண்டு பயமும் பொறாமையும் இல்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைப்பதற்கு காரணமாக இருக்கப்போகின்ற இயக்கம் அமமுக.
2026 தேர்தலில் உறுதியாக அமமுக சட்டமன்றத்திற்கு ஆளுங்கட்சியாக செல்ல இருக்கிறது. ஆளுங்கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்களாக, கூட்டணி ஆட்சியில் இடம் பெறப்போகிறோம். இந்த தேர்தலில் நாம் கை காட்டுபவர் தான் தமிழ்நாட்டின் முதல்ராக வர முடியும் என்பது இயற்கை எழுதி இருக்கின்ற தீர்ப்பு. அதற்காக யாரிடமும் நாம் சமரசம் செய்து கொள்ளவில்லை, செய்யமாட்டேன். கூட்டணியில் சீட்டுகளை பெற்று உறுதியாக 80 சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் நம்மை அனுப்ப இருக்கிறார்கள். கூட்டணி பற்றி எல்லாம் நீங்கள் யாரும் எந்தவித கவலையும் பட வேண்டாம். உறுதியாக அமமுக கௌரவமான இடங்களை பெற்று ஆட்சி அமைப்போம், கூட்டணியின் ஆட்சி அமைப்போம். அதில் அமமுகவைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இடம் பெறுவீர்கள்” என்று கூறினார்.
Follow Us