தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து அமமுக தலைவர் தினகரன் இன்று (03-02-26) செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்தும், காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான உரசல் குறித்தும், விஜய் தங்கள் கூட்டணியின் மீது வைத்த விமர்சனங்கள் குறித்தும், திமுக அரசின் மீதான விமர்சனங்கள் குறித்தும் பதிலளித்தார்.

Advertisment

அந்த வகையில், தினகரன் பேசியதாவது, “தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளைக் கூட திமுக நிறைவேற்றவில்லை. இப்போது தமிழ்நாட்டில் சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை. தமிழ்நாடு முழுவதும் எங்குப் பார்த்தாலும் போதை கலாச்சாரம் பரவிக் கிடக்கிறது. திமுக, பாஜகவை மதவாதக் கட்சியைப் போல் சித்தரித்து, தங்களைச் சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாகக் கட்டிக்கொள்கிறது. கடந்த காலங்களில் திமுக அரசின் மீது மக்கள் எந்த மனநிலையில் இருந்தார்களோ, அதே மனநிலையில் தான் இப்போதும் இருக்கிறார்கள். திமுக மீது முன்பு இருந்ததை விட தற்போது மக்கள் அதிக கோபத்துடன் இருக்கிறார்கள். எனவே திமுக ஆட்சியானது வருகின்ற தேர்தலில் முடிவுக்கு வரும்.

Advertisment

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருக்குமா? என்பது கூட உறுதியாகவில்லை. அந்த கட்சி தேர்தல் கூட்டணிக்கானக் குழுவை அமைத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. இருந்தாலும் இன்னும் கூட்டணி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அமமுகவுக்கு யாரைக் கண்டும் பொறாமையும் கிடையாது, அச்சமும் கிடையாது. அதே நேரத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த ஒரு அழுத்தமும் இன்றி அமமுக கூட்டணி வைத்துள்ளது. விஜய், திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால், அதற்கான வேலையைப் பார்க்கட்டும். அதைவிடுத்து, அதிமுகவில் அமைச்சராக இருந்த செங்கோட்டையனை தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு, அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்வது தவறு. நீங்கள் (விஜய்) களத்தில் வந்து பாருங்கள், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டுப் பேச வேண்டாம். விஜய் எங்களுக்கு எதிரியே  அல்ல. எங்களது ஒரே எதிரி திமுக தான். திமுகவை வீழ்த்த கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முயற்சி செய்தோம். ஆனால் எங்களிடம் ஒற்றுமை இல்லாத காரணத்தினாலே நாங்கள் தோல்வியடைந்தோம். தற்போது, திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகத் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில், நாங்கள் ஒன்றாக இணைந்து நிற்கிறோம்” என்று தெரிவித்தார்.