திருப்பூர் மாவட்டத்தில் அமமுக கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று (08-12-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.

Advertisment

அதற்கு பின்பு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, “பழைய ஓய்வூதிய திட்டம் மட்டுமல்ல பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என்று திமுக சொன்னார்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என்று சொன்னார்கள். வாக்குறுதிகளில் 90% இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இவ்வளவு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சட்ட ஒழுங்கு சீர் கெட்டு போயிருந்தாலும், போதைப் பொருள்கள் அதிகமாக இருந்தும், இவ்வளவு கொடுமைகள் நடைபெற்ற போதிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது. இது தான் நம்மை உறுத்திக் கொண்டிருக்கிறது.

Advertisment

அதனால், திமுகவை எதிர்க்கின்ற அத்தனை கட்சிகளும் சுயபரிசோதனை செய்து கொண்டு அதை சரி செய்வது மூலம் தான் வருகிற தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும். திமுக கூட்டணி பலத்தோடும், ஆட்சி அதிகாரத்தோடும் வலிமையாக இருக்கிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த சில கட்சிகளோடு அவர்கள் பேசிக் கொண்டிருப்பதாக தான் தகவல் வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த சில கட்சிகள் பிளவுப்பட்டுள்ளது. இன்னொன்று தவெக என்ற புதிய வரவு வேறு இருக்கிறது. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று உண்மையிலேயே நினைக்கின்ற கட்சிகள் அதையெல்லாம் உறுதியாக சரி செய்யவில்லை என்றால் திமுகவை வீழ்த்துவது மிகவும் கடினமாக இருக்கும்.

தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமைந்தால் அது திமுக கூட்டணியை வீழ்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தவெக தலைமையில் ஒரு பெரிய கூட்டணி அமைந்தால் தேசிய ஜனநாயகக் கூட்டணியை மூன்றாவது இடத்திற்கு தள்ளக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதை பழனிசாமி மீது எனக்கு தனிப்பட்ட வருத்தத்தால் சொல்லவில்லை, எதார்த்தமாக சொல்கிறேன்” என்று கூறினார். 

Advertisment