TTV Dhinakaran says The contest in the 2026 elections will be between DMK and TVk
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் நேற்று (05.11.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய விஜய், திமுகவையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். குறிப்பாக, 2026ல் திமுக - தவெக இடையே தான் போட்டி என்று கூறினார்.
விஜய் பேசிய விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விஜய்யின் கருத்தை ஆதரித்து திமுக - தவெக இடையே தான் போட்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், “வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தலுக்கு பிறகே நடத்த வேண்டும். சிறப்பு தீவிர திருத்த படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் தள்ளிப்போட வேண்டும். சாமானிய மக்களுக்கு எஸ்.ஐ.ஆர் (SIR) படிவத்தை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்படும். இன்றைக்கு இந்த ஐந்து ஆண்டுகளில் பழனிச்சாமியின் செயல்பாடுகள், அவருடைய ஒரு கட்சி தலைவராக, ஒரு பொதுச்செயலாளர அவருடைய செயல்பாடுகள் தவறாக இருக்கிறது. அவருக்கு யாரை பார்த்தாலும் பயம்.
நான் பழனிசாமியுடன் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை. துரோகத்தை அமமுக ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சி ஆட்சிக்கு வருகிறதா இல்லையா என்பதை கவலைப்படாமல் அதிமுக பொதுச் செயலாளர் என்ற பேரோடு தான் இருக்க வேண்டும் என்ற மாதிரி ஒரு தலைவருக்கு உள்ள தகுதியே இல்லாமல் செயல்படுகிறார். அதனால் விஜய்யுடைய அரசியல் பிரவேசத்துக்கு பிறகு பழனிசாமி தலைமையிலான கூட்டணி மூன்றாவது இடத்துக்கு தான் செல்லும்.
இந்த போட்டி திமுக கூட்டணிக்கும், தவெக கூட்டணிக்கும் இருக்கும். அதற்காக அவரோடு தான் போவேன் என்று சொல்லவில்லை. அதைப் பற்றி நான் முடிவு செய்யவே இல்லை. ஒரு குடிமகனாக இதற்கு பதில் சொல்கிறேன். அதனால் விஜய் தலைமையில் கடுமையான கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணிக்கும் தவெக கூட்டணிக்கும் தான் கடுமையான போட்டியாக இருக்கும். எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தாமல் நான் ஓய மாட்டேன்” என்று கூறினார்.
Follow Us