அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையவுள்ளதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர், செங்கோட்டையனிடன் கட்சியில் இணைவது குறித்து சந்தித்துப் பேசியதாகவும், அதையடுத்து செங்கோட்டையன் நாளை (27-11-25) தவெகவில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ பதவியை இன்று (26-11-25) காலை அதிரடியாக ராஜினாமா செய்தார். இது தொடர்பான கடிதத்தை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து இன்று செங்கோட்டையன் வழங்கினார். இதனிடையே, செங்கோட்டையனை தங்களது கட்சியில் இணைக்க திமுக தீவிர முன்னெடுப்பு எடுத்து வந்தது. இதையடுத்து, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மாலை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், விஜய்யை செங்கோட்டையன் நேரில் சந்தித்து பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், அவர் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்த மூத்த தலைவரான செங்கோட்டையன் தவெகவில் இணைய இருப்பது தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய்-செங்கோட்டையன் சந்திப்பு குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, “நான் அரசியலாக பேசவில்லை. நேற்று கூட நான் தொலைக்காட்சியில் பார்த்த போது மிகவும் வருத்தத்துடன் அண்ணன் செங்கோட்டையன் பேசியிருந்தார். அதனால் அவர் நாளை ஊடகங்கள் முன்பு என்ன பேசுகிறாரோ, அதை தெரிந்து கொண்டு பேசுவது தான் மரியாதையாக இருக்கும். செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது யாருக்கு பின்னடைவு என்பது உங்களுக்கும் தெரியும், தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் தெரியும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும்.
துரோகத்தை வீழ்த்துவதற்காக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, எங்களுடன் பயணித்துக் கொண்டிருப்பவர். கடந்த 2 நாட்களுக்கு கூட ஞாயிறுக்கிழமை மாலை என்னை சந்தித்து என்னுடன் பேசினார். இந்த 2,3 மாதங்களில் சென்னைக்கு வந்தால் என்னை சந்தித்துவிட்டு தான் செல்வார். நீக்கப்பட்டதில் அவர் மிகவும் மனவருத்தத்தில் இருந்தார். பழைய கதைகள் எல்லாம் பேசுவார். அந்த சந்திப்பின் போது கூட, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதை பற்றியோ, விஜய்யை சந்திப்பதை பற்றியோ அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எல்லாவற்றையும் தாண்டி அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அதனால் அவர் ஊடகத்தில் பேசிய பிறகு, அதைப் பற்றி பேசுவது தான் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/26/sengttv-2025-11-26-22-40-48.jpg)