செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் மான்புமிகு எதிர்கட்சி தலைவர் பெரும் மதிப்பிற்குரிய திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களே” எனக் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், “தமிழ்நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த கூட்டணியிலே வரவேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். இன்றைக்கு நாங்கள் முழுமனதோடு தமிழ்நாட்டிலே தேசிய ஜனநாயக கூட்டணியை தலைமை ஏற்றிருக்கின்ற மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிச்சாமி அண்ணன் அவர்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். வழிவந்தவர்கள், ஜெயலலிதாவின் தொண்டர்கள் நாங்கள்.
எங்களுக்குள் சண்டை சச்சரவுகள் இருந்தது உண்மைதான். ஆனால் தமிழ்நாட்டின் நலனை கருதியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நலனை கருதியும் பிரதமரின் அழைப்பை ஏற்று நாங்கள் எங்கள் மனதிலே இருந்த எல்லா கோப தாவங்களையும் விட்டுவிட்டு 2021ஆம் ஆண்டில் நம்மால் முடியாமல் போன ஜெயலலிதாவின் ஆட்சியை உறுதியாக தமிழகத்திலே ஏற்றிட உருவாக்கிட எந்த ஒரு மனமாச்சரியமும் இன்றி எந்த ஒரு தயக்கமும் இன்றி, எந்த ஒரு குழப்பமும் இன்றி சில பேர் சொல்கிற போது போல எந்த ஒரு அழுத்தமும் இன்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த கூட்டணியிலே எங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த கூட்டணியின் வெற்றிக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒவ்வொரு தொண்டனும் தமிழ்நாடு முழுவதும் அயராது பாடுபடுவான் என்கிற உறுதியை பிரதமர் மோடிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த நேரத்திலே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/23/nda-meeting-eps-2026-01-23-16-55-18.jpg)
ஒரு விஷயத்திலே எதிர்ப்பது என்றால் அதிலும் உறுதி. ஆதரிக்க வேண்டும் என்றால் அதிலும் உறுதியாக இருக்கக்கூடிய தன்மையை ஜெயலலிதா எங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பங்காளிகளாக இருந்தவர்கள் நாங்கள். எங்களுக்குள் இருந்த சண்டையால் பிரிந்திருந்தோம் என்பது உண்மை. இன்றைக்கு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு பிரதமர் மோடி தமிழ்நாட்டிலே ஒரு மக்களாட்சியை உருவாக்க வேண்டும். எம்ஜிஆர் ஆட்சியை உருவாக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தோடு இன்றைக்கு மக்களை வாட்டிக் கொண்டிருக்கின்ற இந்த மக்கள் விரோத குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக நாங்கள் முழுவனதோடு இந்த கூட்டணியிலே இணைந்திருக்கிறோம் என்பதை அவர்களுக்கு மீண்டும் நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்றைக்கு தமிழ்நாடே ஒரு கொலை நாடாக கொள்ளை நாடாக மாறி கிடக்கிறது. பத்திரிக்கைகளையும் ஊடகங்களையும் பார்த்தால் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதை மருந்து பழக்கம் உள்ளது. போதை மருந்துக்கு ஒரு ஹப்பாகவே (மையம்) தமிழ்நாடு மாறியிருக்கிறது என்பது வேதனைக்குரியது. இன்றைக்கு அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளாக இருக்கட்டும், அரசு ஊழியர்களாக இருக்கட்டும், ஆசிரியர்களாக இருக்கட்டும், மருத்துவர்களாக இருக்கட்டும் செவலியர்களாக இருக்கட்டும் ஏன் மாற்றுதிறனாளிகள் கூட இன்றைக்கு போராடுகின்ற நிலையிலே இந்த மக்கள் விரோத ஆட்சி ஏற்படுத்தி இருக்கிறது. இங்கே மக்கள் எல்லாம் வருத்தத்தில் இருக்கிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின், தனது மகன் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக துடித்துக் கொண்டிருக்கிறார் அதனை, அந்த குடும்ப ஆட்சியை உறுதியாக நாம் முறியடிப்போம்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/23/nda-meeting-ttv-2026-01-23-16-54-31.jpg)