சென்னை திருவல்லிக்கேணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (18.09.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “சசிகலா என்னைத் துணை பொதுச் செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றார். ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நான் வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற ஐடியாவே எனக்கு கிடையாது. ஏனென்றால் ஜெயலலிதா மூலம் என்னைப் பெரியகுளம், மதுரை என அந்த பக்கமே நான் அரசியலில் இருந்ததினால் எனக்கு அந்த எண்ணமே இல்லை. தேர்தல் வரும் என்ற ஒரு அறிவிப்பு வரப்போகிறது எனத் தெரிந்ததும் வாரம் ஒரு முறை எங்கள் சித்தியைப் போய் பார்ப்பேன். ஏ ஃபார்ம், பி ஃபார்ம் நீங்கள் ரெடி செய்து கொடுங்கள். அவர்தான் கையெழுத்துப் போட வேண்டும். சிறை விதிப்படி வாங்கி கொடுங்கள். நான் துணை பொதுச் செயலாளர் போட முடியாது. அதனால் அதெல்லாம் தயார் செய்து எடுத்துட்டு போனேன். 

Advertisment

எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கலாம் என்பதால் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தார்கள். இப்போது பன்னீர்செல்வம் வெளியில் போயிருக்கிறாரே அவர் பிரச்சனை பண்றாரே, எலெக்சன் கமிஷனில் ப்ராப்ளம் வரலாம். இந்த நேரத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நீ தேர்தலில் போட்டியிட்டால் நன்றாக இருக்குமே நீ என்ன நினைக்கிறாய் என்று கேட்டார்கள். எனக்கு அவர்கள் சொன்னதும் தான் அது வரைக்கும் அந்த எண்ணமே இல்லை. அதான் உண்மை. தளவாய் சுந்தரம் அதை ஒப்புக்கொள்கிறாரா? இல்லையா? என்று தெரியாது. ராதாகிருஷ்ணன் ஒப்புக்கொள்வாரா ?இல்லையா? என்று தெரியாது. ஆனால் அதான் உண்மை. நான் ஒன்றும் மறைத்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. 

அவர்கள் சொன்ன அதே எண்ணத்தோடு நான் இவர்களிடம் சொன்னேன். பழனிச்சாமியிடம் சொன்னேன். அங்கே உள்ள முக்கியமான அமைச்சர்கள் எல்லாரும் சேர்ந்து நீங்கள் போட்டியிடுவதுதான் சரி . சசிகலா சொன்னது சரி. இந்த நேரத்தில் ஒற்றுமை நிலவ நீங்கள்தான் போட்டியிட வேண்டும் என்று சொன்னார்கள். அதைத் தொடர்ந்து தான் அந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டேன். அந்த தேர்தலில் நான் போட்டியிட்டதினால் பழனிச்சாமிக்கு என்ன பயம் வந்தது என்றால் நான் சட்டமன்றத்திற்கு வந்து முதலமைச்சர் பதவியைக் குறி வைப்பேனோ? என்கிற பயம் அதான். அவருக்குச் சுயநலத்தால் வந்த பயம். எனக்கு அந்த மாதிரி எண்ணமே கிடையாது. இது தளவாய் சுந்தரத்துக்கு நன்றாகத் தெரியும். என் பழைய நண்பர் அவர். என் கூட இருந்தபோது அவருக்கு உண்மை, மனசாட்சியைத் தொட்டுப் பார்த்தால் எனக்கு அந்த மாதிரி எண்ணமே இல்லை. 

தேர்தலில் நிற்க வேண்டும் என்ற ஆசை இல்லை. அப்போது எங்கள் மீது கொலைப்பழி, என்னென்ன பழியோ இருந்தது. அதனையும் மீறி ஜெயலலிதாவின் தொகுதியில் ஜெயிக்கணுமே என்ற ஒரு உத்வேகத்தோடு நாங்கள் செயல்பட்டோம். தேர்தல் நடந்தது தெரியும். அடுத்த 4வது நாள் ஏப்ரல் 17 அன்றைக்குத்தான் எனக்குச் சம்மன் வருகிறது. டெல்லிக்கு வரச் சொல்லி. அந்த நேரத்தில் திடுதிப்பென்று என்று எல்லாம் முன்னால் எனக்கு இன்னும் அந்த வீடியோ காட்சி ஞாபகம் இருக்கிறது. எல்லாம் வெளியில் திடுதிப்பென்று வந்து எங்கேயோ பழனிச்சாமி வீட்டிலோ அல்லது ஒரு அமைச்சர் வீட்டிலோ எல்லாம் சென்று என்னைக் கட்சியை விட்டு நீக்குகிறார்கள். அப்போதுகூட நான் சொன்னேன். நான் அதை ஒன்றும் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் நல்ல விதமாகக் கட்சி நடத்துங்கள் என்று கூறி விட்டு நான் போய்விட்டேன்” எனப் பேசினார்.