அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், விஜய்யின் தவெக கட்சியுடன் கூட்டணி சேர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் திடீரென்று, அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தார். இது தவெகவுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Advertisment

இந்த சூழ்நிலையில், டிடிவி தினகரன் தவெகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று நினைத்ததாகவும் ஆனால் அவருக்கு சூழ்நிலை அப்படி ஏற்பட்டிருக்கிறது எனவும் தவெக நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (27-01-26) செய்தியாளர்களைச் சந்தித்தப் போது கூறினார்.

Advertisment

இந்த நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தவெகவுடன் கூட்டணி சேர்வேன் என செங்கோட்டையன் நம்பினார். அதை நான் மறுக்கவில்லை. அவர் என்னை அழைத்த போது நட்பின் காரணமாக உடனடியாக நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. அவர் சொன்னது போல் எனக்கு எந்த சூழ்நிலையும் இல்லை. எனக்கு எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அரசியல் என்பது சதி நிறைந்த துறை. அதனால் தேவையில்லாத சகுனிகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு ஆட்சி அமையும் போது நல்ல உறவு இருக்க வேண்டும் என்பதற்காகவும் தான் என்.டி.ஏ கூட்டணி இணைந்துள்ளேன்.

ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக நட்பு ரீதியிலான அணுகுமுறையில் எங்களை அணுகினார்கள். செங்கோட்டையன் கூட டெல்லிக்கு சென்றுவிட்டு தான் தவெகவில் இணைந்துள்ளார். அப்படி என்றால் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அவருக்கு எப்படி அழுத்தம் கொடுக்கப்படவில்லையோ அதே மாதிரி எனக்கும் எந்த அழுத்தமும் இல்லை. டெல்லிக்கு நான் சென்ற போது கூட செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றுவிட்டார் என்றுதான் என்னிடம் கேட்டார்கள். நானும், அண்ணன் ஓபிஎஸும் திமுகவில் சேர வாய்ப்பே இல்லை. தனித்து நின்றாலும் நிற்பேனே தவிர வேறு இடங்களுக்கு செல்வதற்கு வாய்ப்பு இல்லை” என்று கூறினார். 

Advertisment