TTV Dhinakaran criticized dmk government at NDA meeting in madurai
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (01-26) மாநாடு நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது, “மதுரை மீட்ட சுந்தரபாண்டியன், அடிமைப்பட்டு கிடந்த மதுரை பாண்டிய நாட்டை மீட்டெடுத்து கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியை நிறுவினார். எம்.ஜி.ஆர் நடித்த படம் என்பதால் அல்லது பட்டி தொட்டி எல்லாம் மதுரை மீட்ட சுந்தரபாண்டியனை எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னால் கிட்டத்தட்ட 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மாமன்னனை பலருக்கு தெரியாது. அன்றைக்கு 300 ஆண்டுகள் சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சி விழுந்து களப்பிறர்கள் ஆட்சி நடந்தது. இங்கே உள்ள ஆட்சியாளர்களை வீழ்த்தி 300 ஆண்டுகள் தமிழ்நாட்டை அடக்கி ஆண்டார்கள். அந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்றில் சொல்லப்படுகிறது. அந்த இருண்ட காலத்தை ஆட்சி நடத்திய களப்பிறர்களை முறியடித்து மதுரை தேசத்தை மீட்டெடுத்த ஒரு மாபெரும் வீரர் கடுங்கோன் பாண்டியன். அந்த கடுங்கோன் பாண்டியனாக நமது பிரதமர் இங்கே நம்மோடு அமர்ந்திருக்கின்றார். அன்றைக்கு கடுங்கோன் பாண்டியனுக்கு பல்வேறு தளபதிகளும் போர் வீரர்களும் அவரோடு சேர்ந்து போரிட்டு மதுரை மீட்டார்கள்.
அதுபோல இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு இருண்ட ஆட்சியை, ஒரு மக்கள் விரும்பாத ஆட்சியை, எங்கும் கொலை, எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்று அனைவரும் பயந்து கொண்டிருக்கின்ற ஒரு ஆட்சியை, கொலை கொள்ளை இரண்டு வயது பெண் குழந்தையிலிருந்து வயது முதிர்ந்த மூதாட்டி வரை பாதுகாப்பு இல்லாத ஒரு ஆட்சியை, எங்கும் போதை, பட்டிதொட்டி எல்லாம் போதை என்று மாணவர்களும், இளைஞர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்ற ஒரு ஆட்சியை, ஊழலை தவிர வேறு ஒன்றும் இல்லை என்று இங்கே மக்கள் வருந்துகின்ற ஒரு ஆட்சியை, இன்னும் சொல்லப்போனால் விவசாயிகள் முதற்கொண்டு அனைத்து நிலை மக்களும் தெருவிற்கு வந்து போராடுகின்ற தேர்தல் வாக்கு வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாத இந்த இருண்ட திமுக ஆட்சியை வீழ்த்துவதற்கு பிரதமருக்கு உறுதுணையாக நமது அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமாகிய அண்ணன் இபிஎஸ்ஸும், பா.ம.க தலைவர் அன்புமணியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் போன்றவர்களும் அவருக்கு கரம் கோர்த்து இந்த மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சரித்திரம் மீண்டும் திரும்பி இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நிறைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
இன்றைக்கு இந்த திமுக ஆட்சியில் எத்தனையோ ஊழல்கள், எத்தனையோ முறைகேடுகள் அவர்களால் மறைக்கப்பட்டாலும் அவையெல்லாம் இன்றைக்கு ஊடகங்கள் மூலம் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். ஏழை எளிய மக்களை எப்படியாவது விலை கொடுத்து வாங்கி விடலாம், எப்படியாவது மீண்டும் திமுக ஆட்சி அமைத்து அந்த குடும்பத்தின் வாரிசாகிய உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டி விடலாம் என்று தமிழ்நாட்டு முதல்வர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார். ஆனால் இந்த களப்பிறர் ஆட்சி போன்ற தமிழினத்தின் இருண்ட ஆட்சியாக விளங்குகின்ற திமுக ஆட்சியை உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். அந்த திமுக கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்” என்று கூறினார்.
Follow Us