கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசியலில் நடக்கும் விவகாரம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என அமமும பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் தார்மீக பொறுப்பேற்க வேண்டும். அதற்காக குற்றத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் சொல்லவில்லை. இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் நிதானமாகவும், சரியாகவும் செயல்படுகிறார். அவருக்கு தவெகவையோ, விஜய்யையோ பழிவாங்க வேண்டிய எண்ணம் இல்லை என்பதை அவருடைய செயல்பாடிகளிலேயே தெரிகிறது. சில சொல்வது போல், விஜய்யை கைது செய்தால் வருங்காலத்தில் தவறான முன்னுதாரணமாகிவிடும். அனைத்து கட்சிகளும் கூட்டமும், மாநாடும் நடத்துகிறது. காவல்துறை என்னதான் உஷாராக இருந்தாலும், நம்மை மீறி விபத்து நடக்க வாய்ப்பிருக்கிறது. அதற்காக கட்சித் தலைவரை கைது செய்ய முடியுமா? இது அனைத்து அரசியல் கட்சியையும் பாதிக்கும். அதை தான் முதல்வரும் உணர்ந்திருக்கிறார். 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் மூலம், அவர் நிதானமாக செயல்படுகிறார். இந்த விவகாரத்தில் முதல்வரை நான் உயர்த்திப் பேசவில்லை.
இளவு விழுந்த நேரத்திலே, கூட்டணி பேச்சு நடத்துகிறார்கள் என்பதை உயிரிழந்த குடும்பத்தினர் பார்த்தால் எவ்வளவு வருத்தப்படுவார்கள்?. அந்த நாகரீகம் கூட இல்லாமல் எடப்பாடி பழனிசாமி கூட்டணி உருவாக்குவதற்காக பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டணி அமைப்பது என்பது அவர்களுடைய உரிமை. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி தனியாக நின்று ஒன்றும் செய்ய முடியாது. அதனால் நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூட்டணிக்கு சேருங்கள். ஆனால், இந்த நேரத்திலா?. தவெக கூட்டணிக்கு வர வேண்டும் என்பதற்காக குள்ளநரித்தனமாக குற்றச்சாட்டுக்களை எல்லாம் ஆட்சியாளர்கள் மீது அவர் போடுகிறார். அவருடைய ஆட்சியில் நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு அவர் பொறுப்பேற்றாரா?. அதனால் இந்த விஷயத்தில் நடுநிலையோடு இருக்க வேண்டும். தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருந்தால் நீதிமன்றம் கண்டித்திருக்காது.
நான் கருத்து கந்தசாமி கிடையாது. அதனால் இந்த விஷயத்தில் விஜய்க்கு அட்வைஸ் செய்ய நான் யார்?. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் துணையோடு எடப்பாடி பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்தாமல் விடமாட்டோம். 4 ஆண்டுகளுக்கும் முன்பும் எத்தனையோ கூட்ட நெரிசல் சம்பவம் நடந்திருக்கிறது. அதற்காக காவல்துறையை குற்றம் சொல்ல முடியுமா?. எந்த ஆட்சி நடந்தாலும் காவல்துறையை குறை சொல்லி என்ன ஆவது? காவல்துறையும் மனிதர்கள் தானே?” என்று பேசினார்.