பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் அதிவேகமாக வாகனங்களை ஒட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி அவரது வாகன ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். அதன்படி இந்த உத்தரவு வரும் 2033ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று டி.டி.எப். வாசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதி மாலா அமர்வில் இன்று (12.08.2025) விசாரனைக்கு வந்தது. அப்போது டிடிஎப் வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஒருவரது டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு 6 மாதம் கடந்தாலே புதிய லைசென்ஸ் வழங்க கோரி நீதிமன்றத்தை நாடலாம் என்ற நிலையில் தன்னுடைய லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் கடந்துவிட்டதால் புதிய லைசன்ஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, “லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டு 6 மாதம் கடந்துவிட்டால் புதிய லைசென்ஸ் பெற நீதிமன்றத்தை மட்டும் தான் நாட வேண்டும் என்றில்லை. இது தொடர்பாக துறைசார்ந்த உரிய அதிகாரிகளை அணுகலாம்” எனத் தெரிவித்து டி.டி.எப். வாஷன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், சாலையில் செல்லும் தனது இரு சக்கர வாகனங்களில் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து அதனை டி.டி.எப். வாசன் யூடியூப்களில் பதிவேற்றம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.