ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 8.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியிருந்தது. பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியது. இதன் காரணமாக அங்கிருந்த கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட அதிர்வுகள், சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

உலகளவில் கடந்த 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான மிகப்பெரிய நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹவாய், அலாஸ்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கிழக்குப் பகுதிக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய நேரப்படி இன்று (30.07.2025) அதிகாலை 06.30 மணியளவில் சுனாமி தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்நிலையில் ரஷ்யாவின் குரில்ஸ்க் தீவு பகுதியில் சுனாமி அலைகள் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  இந்த சுனாமி அலைகள் 3 முதல் 4 மீட்டர் உயரத்திற்கு எழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த சுனாமி அலைகள் அங்குள்ள சில தீவுகளைத் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.